உணவு உலகத்து ரகசியங்களும்.. ருசிகரங்களும்...


உணவு உலகத்து ரகசியங்களும்.. ருசிகரங்களும்...
x
தினத்தந்தி 5 Aug 2018 5:33 PM IST (Updated: 5 Aug 2018 5:33 PM IST)
t-max-icont-min-icon

நாம் இந்த உலகத்தில் குழந்தையாக பிறக்கும் முன்பே, நமது தாய் மார்பில் நமக்கான (பால்) உணவு பத்திரமாக படைக்கப்பட்டுவிடுகிறது.

உலகத்தின் உணவுத் தத்துவமும் இதுதான். உயிர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே உலகத்தில் அவைகளுக்கான உணவுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. பாலை (முதல்) உணவாகத் தருகிறவரை ‘தாய்’ என்கிறோம். அதைப்போல் காய், கனி, கிழங்கு, கீரை, தானியங்கள் என்று அத்தனையையும் தருகின்ற மண்ணையும் தாயாகப் போற்றுகிறோம். அதனால்தான் ‘தாய் மண்’ என்று சொல்கிறோம்.

எப்படியோ ஏதாவது ஒருவகையில் தாய்தான் மனுஷியாகவும், மண்ணாகவும் இருந்து உணவளிக்கிறாள். மனுஷியான தாய், தான் பெற்ற குழந்தைக்கு முதலில் தனது பாலைப் புகட்டினாள். பிற்காலத்தில் அவள் தான் சாப்பிட்டுப்பார்த்து, சரியாக ஜீரணமாகிறது, ஆரோக்கியத்திற்கும் ஏற்றது, என்று நம்பிய உணவை தனது வாயால் நன்றாக மென்று அதை குழந்தைக்கான உணவாக ஊட்டியிருக்கிறாள்.

இயற்கை, இந்த உலகம் முழுக்க பூமி எங்கும் சமதளங்களில் தானியங்களையும், தாவரங்களையும் படைத்திருக்கிறது. காடு களில் காய், பழம், தேன், மூலிகைகளை உருவாக்கியிருக்கிறது. அதோடு பிராணிகளையும், விலங்குகளையும் தோற்றுவித்திருக்கிறது. நீர் நிலைகளிலும், கடலிலும் மீன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிரினங்களையும் படைத்துள்ளது. இவை அனைத்தும் படைக்கப்பட்டு பழங்கால மனிதனைச் சுற்றி பரந்து விரிந்து கிடந்தன.

ஆதிமனிதனுக்கு பசி உணர்வு ஏற்பட்டது. அவன், தன் பசியை ஆற்ற எதை உண்பது? மண்ணின் மேலே விளைவதையா? கீழே விளைவதையா? மரத்தில் காயாய் தொங்குவதையா? பழமாய் தொங்குவதையா? கடலில் நீந்துவதையா? காட்டில் ஓடுவதையா? எதை உண்பது? எப்படி உண்பது? என்ற ஏகப்பட்ட கேள்விகளோடு, சரியான வழிமுறைகள் தெரியாமல் தவித்தான். கண்டதையும் சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டு அது உடலுக்கு பொருந்தாத விஷமாகிவிட்டால், உயிர் அல்லவா போய்விடும்.

உண்மைதான்! இந்த மண்ணுலகில் விளைந்திருக்கும் பொருட்களில் எது சரியான உணவு? எது விஷம்? என்பதை கண்டறிய, விஞ்ஞான அறிவும், தகவல்-தொடர்பும் இல்லாதிருந்த அந்த காலத்தில் (நாம் இன்று சாப்பிடும் முறையான உணவை கண்டுபிடித்து தருவதற்காக) எத்தனை மனிதர்கள் தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக்கி அவஸ்தை பட்டு இறந்திருப்பார்கள்!

வரலாற்று உண்மைகளை புரிந்துகொள்ள நாம் காலத்தை ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்’ ‘கிறிஸ்து பிறப்பதற்கு பின்’ என்று பிரிப் பதுபோல், வரலாற்றுக்கு முந்தைய உணவு காலகட்டத்தை குறிப்பிட ‘தீ.மு’ (தீயை கண்டுபிடிப்பதற்கு முன்பு), `தீ.பி’ (தீயை கண்டுபிடித்த தற்கு பின்பு) என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் தீயை கண்டுபிடித்த பின்புதான் மனிதர்கள் உணவின் சுவையை முழுமையாக உணர்ந்தார்கள்.

இன்றைய நவீன உணவு உலகம் எத்தனையோ புரட்சி கரமான வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் சந்தித் திருக்கிறது. முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்றால்தான் அந்தந்த நாட்டு புகழ்பெற்ற உணவுகளை சாப்பிட முடியும். இன்றைய நிலை அப்படி அல்ல, பல்வேறு நாட்டு புகழ்பெற்ற உணவுகள் அதே சுவையில் இந்தியாவிலும் கிடைக்கிறது. நம் நாட்டு புகழ்பெற்ற உணவுகள் வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன. இன்று நாம் ஆரோக்கியத்தைவிட சுவைக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறோம். அதனால் எந்த உணவகத்தில் சுவையான உணவுகள் கிடைக்கின்றன என்று தேடித்தேடிச் சென்று சுவைக்கின்றோம்.

இந்த தேடுதல் வரலாற்று காலத்திலே தொடங் கிவிட்டது. எந்த நாட்டில் ருசி நிறைந்த புதிய வகை உணவுகள் கிடைக்கும் என்று மன்னர்களும் தேடியிருக்கிறார்கள். பிற நாடுகளை கைப்பற்ற வேண்டும், அங்கிருக்கும் பொன், பொருளை அள்ளிக்கொண்டு போகவேண்டும் என்று போருக்கு புறப்பட்ட மன்னர்கள் எதிரிநாடுகளில் பார்த்த வித்தியாசமான உணவுப்பொருட்களை ருசித்து விட்டு, வியந்துபோய் அதற்கு தேவைப்படும் உணவுத் தாவரங்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். எதிரி நாடுகளில் உள்ள புதிய உணவுகளையும் தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

ஆதிகாலத்து உணவுகளை பற்றி நாம் குறிப்பிடும்போது தேனீக்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டாக வேண்டும். அவை சேகரித்த தேன்தான் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ருசிமிக்க உணவாக இருந்திருக்கிறது. தேனை கடவுளுக்கு நிகராக கருதி, பிறந்த குழந்தையின் நாக்கில் ஒரு துளியை தொட்டுவைத்து, அது சிரித்ததும் கடவுள் அனுக்கிரகம் அந்த குழந்தைக்கு கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்திருக்கிறார்கள். பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் தேனை சாட்சியாக வைத்துதான் திருமணம் செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தேனின் சுவையை மட்டுமே அறிந்தவன், மன்னன் டேரியஸ். அப்போது பெர்ஷியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரான் பகுதியை ஆண்ட அவன், கி.மு. 510-ல் இந்தியா மீது படையெடுத்து வந்தான். அதற்கும் வெகுகாலத்திற்கு முன்பே இந்தியாவில் கரும்பு பயிராகி இருந்தது. அதில் ஜூஸ் தயாரித்து இந்தியர்கள் தித்திப்பாக பருகிக்கொண்டிருந்தார்கள். மன்னன் டேரியஸ் பஞ்சாபில் கரும்புத் தோட்டத்தை பார்த்தான். அதில் சுவையான ஜூஸ் தயாரித்து பருகிவிட்டு, ‘இது என்ன மேஜிக் பயிர்’ என்று திகைத்து நின்றான். பஞ்சாபியர்கள் கரும்பின் பூர்வீக கதையையும் அருமை பெருமையையும் சொல்ல, ‘இதை என் நாட்டுக்கு கொண்டு செல்ல என்ன வழி?’ என்று கேட்டு, பத்திரமாக கரும்பை ஈரானுக்கு கொண்டுபோய் அங்கு அறிமுகப்படுத்தினான்.

கரும்பின் கதை இதுவென்றால், வாழைப்பழம் கிரீஸ் நாட்டிற்கு போனது இன்னும் வித்தியாசமான கதை. மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327-ல் பஞ்சாபில் போரிட்டு ரொம்ப சோர்ந்து போயிருந்தார். ‘உடனடி உற்சாகத்திற்கு உடனே ஏதாவது உணவு வேண்டும். ஏதாவது இந்தப்பகுதியில் இருக்கிறதா என்று கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்’ என்று படைவீரர்களிடம் சொல்ல, அவர்கள் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து வாழைத்தாரில் சில பழங்கள் கனிந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். அவைகளை சாப்பிட்டு பார்த்து சுவையை அறிந்ததும், அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் எல்லாம் தேடி, கனிந்த பழங்களை கண்டெடுத்து மன்னன் அலெக்சாண்டரிடம் கொண்டுபோய் கொடுத்திருக் கிறார்கள். அதை சுவைத்து மகிழ்ந்த மன்னன், வாழைப்பழத்தின் பெருமையை உணர்ந்து அதனை கிரீஸ் நாட்டிற்கு கொண்டு சென்றான் என்கிறது, வரலாறு.

இப்போது ஆங்காங்கே ‘ஒயின் ஷாப்’கள் கண்களில்படுகின்றன. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழித்துவிடுவோம்’ என்று சில கட்சிகளும் தேர்தல் காலங்களில் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இன்று வில்லனாக சித்தரிக்கப்படும் (ஒரிஜினல்) ஒயினை மனிதன், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டான். திராட்சை பழத்தை ஊறவைத்து, புளிக்கவைத்து, மண்ணுக்குள் புதைத்துவைத்து எப்படி எல்லாமோ அதை தயாரித்திருக்கிறார்கள். தாங்கள் தயாரித்த ஒயினோடு, தேனையும் கலந்தும் கிரேக்கர்கள் பருகியிருக்கிறார்கள். இப்படி ‘கலந்து’ சாப்பிட்டால் அறிவுவிருத்திபெறும் என்று ஆதிகாலத்து ஐரோப் பியர்கள் நம்பினார்கள். அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேனை மூலப்பொருளாகக் கொண்டு ஒருவகை ‘பீர்’ தயாரித்து பருகி மக்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.

சரித்திரத்தில் இடம்பிடித்த பேரரசர்களில் ‘ருசித்து மகிழ்ந்தவர்’ என்று பெயரெடுத்தவர், பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி. புதிது புதிதான உணவு வகைகளை ருசித்துக்கொண்டே இருப்பது இவர் வழக்கம். சுவைமிகுந்த உணவுகள் உலகில் எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை இவருக்கு சொல்லவே ஒரு குழு இயங்கி வந்திருக்கிறது. புதிய உணவு பற்றிய தகவல் கிடைத்த மறுநாளே அந்த நாட்டிற்கு தனது சமையல்கலை நிபுணர்களை அனுப்பி அதை கற்று வந்து, தனக்கு தயார் செய்து தரும்படி பதினான்காம் லூயி சொல்வார். இவரது நாக்கை சுவையால் கவர்ந்த சமையல்கலை நிபுணர்கள் ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பின்லாந்து, இத்தாலி என்று சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 150 மதுவகைகளை சுவைத்திருக்கிறார். இன்று உலகம் முழுக்க பரவி இருக்கும் கலந்து குடிக்கும் ‘காக்டெயில்’ கலாசாரம் இவர் காலத்தில்தான் உதயமாகியிருக்கிறது. இத்தாலிக்கு ஆள் அனுப்பி, விஸ்கி தயாரிப்பு கலையை கற்றுவரச் செய்து, தன் நாட்டில் சொந்தமாக மது தயாரிப்பு ஆலையையும் இவர் நிறுவியிருக்கிறார்.

உலகின் தலைசிறந்த மனிதர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவருக்கும் பசி, தாகம், மோகம் போன்ற உணர்வுகள் இருக் கின்றன. இவற்றில் எப்போதும், எல்லா காலகட்டத்திலும் இருந்து கொண்டிருப்பது பசிதான். மனிதர்கள் தினமும் இரு முறையாவது சாப்பிட்டாக வேண்டும். உடல் இயக்கத்திற்கு உணவே ஆதாரமாக இருக்கிறது. அதே நேரத்தில் பசியைப் போக்க மனிதனுக்கு ருசியும் தேவைப்படுகிறது. அந்த ருசியை மனிதன் தேடத் தொடங்கியதால் உலகில் பல்லாயிரக் கணக்கான உணவு வகைகள் தோன்றி விட்டன. இன்றும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நல்ல உணவுகளைத் தேடி சுவையுங்கள்! ஆரோக்கியத்தை பேணுங்கள்! ஆரோக்கிய வாழ்க்கையே ஆனந்த வாழ்க்கை!

கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ், (உணவியல் எழுத்தாளர்), சென்னை.

Next Story