தஞ்சை மாவட்டத்தில் கடைமடைக்கு தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி


தஞ்சை மாவட்டத்தில் கடைமடைக்கு தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கடைமடைக்கு தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,


தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி நேற்று வழங்கப்பட்டது. 19 குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம், வேட்டி–சேலை ஆகியவற்றை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 19 குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில் தலா ரூ.5 ஆயிரம், வேட்டி–சேலை கொடுக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசின் ஆணைப்படி என்னென்ன நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமோ அந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தினால் கடைமடைக்கு தண்ணீர் போகாமல் இருந்தது. இப்போது கடைமடைக்கு தண்ணீர் செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தினரும், பொதுப்பணித்துறையினரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? என்று நாளை(இன்று) கோர்ட்டில் தெரியும். திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை. அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 37 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, யார் வேண்டுமானாலும் வெற்றி பெறுவோம் என்று சொல்லலாம். ஆனால் சொல்வதை செய்து காட்டிய ஒரே தலைவி ஜெயலலிதா மட்டும் தான். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க. கொடியையும் வைத்திருப்பவர்கள் தான் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story