லாரி மீது கார் மோதல்; தந்தை – மகள் சாவு
சோளிங்கர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் பெங்களூருவை சேர்ந்த தந்தை – மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோளிங்கர்,
பெங்களூருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). இவரது மனைவி புஷ்பா (43). இவர்களது மகள் ரித்திகா (11). இவர்கள் 3 பேரும் காரில் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம், குருவராஜப்பேட்டை அருகே ஈசலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காரை செல்வராஜ் ஓட்டினார்.
சோளிங்கர் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் நின்றிருந்த டிப்பர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் செல்வராஜ், புஷ்பா, ரித்திகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ், ரித்திகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். புஷ்பா சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.