திருவாடானை யூனியனில் அரசு மானியம் வழங்கப்படாததால் பசுமை வீடுகள் கட்டும் பணி பாதிப்பு


திருவாடானை யூனியனில் அரசு மானியம் வழங்கப்படாததால் பசுமை வீடுகள் கட்டும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 2:30 AM IST (Updated: 5 Aug 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் அரசு மானியம் வழங்கப்படாததால் பசுமை வீடுகள் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தொண்டி,

திருவாடானை யூனியனில் 2016–17 மற்றும் 2017–18ம் நிதியாண்டுகளில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 100–க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த வீடு கட்டுபவர்களுக்கு 3 அல்லது 4 கட்டமாக அரசு வழங்கும் மானியம் வழங்கப்படும். இந்த மானிய தொகையை பெற அடிக்கடி யூனியன் அலுவலகத்திற்கு வருபவர்களிடம் பணம் இல்லை என்று அலுவலர்கள் தெரிவிப்பதால் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் திருவாடானை யூனியனில் பசுமை வீடுகள் கட்டும் பணிகள் கடந்த பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பசுமை வீடு கட்டுபவர்கள் கூறியதாவது:– திருவாடானை யூனியனில் மணல் குவாரிகள் இல்லாததால் கடுமையான மணல் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக பசுமை வீடுகள் கட்டும் பயனாளிகள் அனைவரும் மணலை அதிக விலை கொடுத்து வாங்கி வீடு கட்டி வருகிறோம்.

மேலும் யூனியன் அலுவலகத்தில் சிமிண்டு மூடைகள், கம்பி போன்றவற்றை உரிய நேரத்தில் வழங்குவது இல்லை. இதற்கான அரசு உத்தரவை வாங்க யூனியன் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவதில் பெரும் சிரமமேற்படுகிறது. இந்தநிலையில் அதிகாரிகள் விரைவில் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதனால் எங்களின் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் வீடுகளை கட்டினோம். ஆனால் 2016–17ம் ஆண்டு கட்டிய வீடுகளுக்கு இதுவரை ஒரு சிலரை தவிர பலருக்கு முழுமையான அரசின் மானியம் கிடைக்கவில்லை. இதேபோல 2017–18ம் ஆண்டு பசுமை வீடுகள் கட்டுபவர்கள் பலருக்கு அரசின் மானியத்தில் முதல் தவணை கூட இதுநாள் வரை வழங்கப்படவில்லை.

இதனால் அடிக்கடி யூனியன் அலுவலகம் சென்றுவர வேண்டி உள்ளது. அங்கு கேட்கும் போது அரசிடம் இருந்து பணம் வரவில்லை என்று பதில் கூறுகின்றனர். இதன் காரணமாக பசுமை வீடு கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பசுமை வீடு கட்டுபவர்களுக்கு அரசின் மானியம் உடனே கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story