போக்குவரத்து விதி மீறியதாக ஆட்டோக்கள் பறிமுதல்: கொள்ளேகால் போலீஸ் நிலையம் முற்றுகை


போக்குவரத்து விதி மீறியதாக ஆட்டோக்கள் பறிமுதல்: கொள்ளேகால் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 6 Aug 2018 3:30 AM IST (Updated: 6 Aug 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதி மீறியதாக ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் கொள்ளேகால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

கொள்ளேகால், 

போக்குவரத்து விதி மீறியதாக ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் கொள்ளேகால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டோக்கள் பறிமுதல்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் ஏராளமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. அந்த ஆட்டோக்களை நிறுத்த டவுன் பகுதியில் தனியாக நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோ டிரைவர்கள் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாகவும், ஆட்டோக்களை நிறுத்தத்தில் நிறுத்தாமல், கண்ட இடங்களில் நிறுத்தி வைப்பதாகவும் ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளேகால் டவுன் பகுதியில் சில ஆட்டோக்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கியதாக கூறி அந்த ஆட்டோக்களை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீணா நாயக், பறிமுதல் செய்தார். மேலும் அவர்களுக்கு அபராதம் விதித்தார். இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீணா நாயக்கின் நடவடிக்கையை கண்டித்து நேற்று கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் வீணா நாயக்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘சப்-இன்ஸ்பெக்டர் வீணா நாயக், வேண்டுமென்றே எங்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து ஆட்டோக்களை பறிமுதல் செய்கிறார். அவருடைய நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. நாங்கள் பயணிகளுக்காக ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்திவிட்டு காத்திருந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி ஆட்டோக்களை பறிமுதல் செய்கிறார்’ என்றனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும், கொள்ளேகால் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் வீணா நாயக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ராஜண்ணா அவர்களிடம் சமாதானம் பேசினார். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா, நிருபர்களிடம் கூறுகையில், ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story