குன்னூர் ஏல மையத்தில் ரூ.11 கோடியே 55 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம்
குன்னூர் ஏல மையத்தில் ரூ.11 கோடியே 55 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.
குன்னூர்,
குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுத்து வருகின்றனர்.
விற்பனை எண் 31–க்கான ஏலம் கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலத்துக்கு வந்தது. இதில், 10 லட்சத்து 37 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 92 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.
இந்த ஏலத்தில் 13 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 90 சதவீதம் ஆகும். அதன் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 55 லட்சம் ஆகும். ஏலத்தில் விற்பனையான அனைத்து தேயிலைத்தூள்களும் கிலோவுக்கு 1 ரூபாய் விலை உயர்வு ஏற்பட்டது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 253 ரூபாயாக இருந்தது. ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோவுக்கு 277 ரூபாய் என அதிகபட்ச விலையாக ஏலம் சென்றது. சராசரி விலையாக இலை ரக தேயிலைத்தூளின் சாதாரண வகை கிலோ ஒன்றுக்கு 60 ரூபாயில் இருந்து 62 ரூபாய் வரையிலும், முதல் ரக தேயிலைத்தூள் கிலோவுக்கு 118 ரூபாயில் இருந்து 125 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது.
டஸ்ட் ரக தேயிலைத்தூளின் சாதாரண வகை கிலோவுக்கு 68 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையிலும், முதல் ரக தேயிலைத்தூள் கிலோவுக்கு 115 ரூபாயில் இருந்து 128 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது.
விற்பனை எண் 32–க்கான ஏலம் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வருகிறது.