நாடாளுமன்ற தேர்தலில் ஷோபா பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவார் எடியூரப்பா பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் ஷோபா பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவார் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2018 10:00 PM GMT (Updated: 5 Aug 2018 6:50 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் ஷோபா எம்.பி மீண்டும் களம் காண்பார் என்றும், அவர் பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எடியூரப்பா கூறினார்.

மைசூரு,

நாடாளுமன்ற தேர்தலில் ஷோபா எம்.பி மீண்டும் களம் காண்பார் என்றும், அவர் பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் பா.ஜனதா மாநில தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா கூறினார்.

முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்–மந்திரியும், பா.ஜனதா மாநில தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா நேற்று மைசூருவுக்கு வந்தார். மைசூரு டவுனில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இம்மாதம் 29–ந் தேதி கர்நாடகத்தில் நகர உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களை அதிக அளவில் வெற்றியடைய செய்ய வேண்டும். அதற்காக தொண்டர்கள் இப்போதிருந்தே பாடுபட வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து நகரசபை மற்றும் புரசபைகள் பா.ஜனதாவின் வசம் வர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில்...

அதன்மூலம் கட்சியை பலப்படுத்தி அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். தற்போது நான் மைசூரு மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக இங்கு வந்துள்ளேன்.

வேட்பாளர்கள் தேர்வு முடிந்த பின்பு, வேட்பாளர்கள் யார், யார் என்று அறிவிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களையும் ரகசியமாக தேர்வு செய்வேன். பா.ஜனதாவுக்காக பாடுபட தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

டெல்லி செல்கிறேன்

இந்த முறை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஷோபா எம்.பி. மீண்டும் களம் காண்பார். அவர் பெங்களூரு தொகுதியில் இருந்து போட்டியிடுவார். மைசூருவில் பிரதாப் சிம்ஹா எம்.பி. நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். நான் வருகிற 9–ந் தேதி முதல் கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்த உள்ளேன்.

நாளை(அதாவது இன்று) நான், நஞ்சன்கூடுவில் நடைபெற உள்ள பா.ஜனதா வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன். விழாவை முடித்துக்கொண்டு மாலையில் நான் டெல்லி செல்கிறேன்.

வேதனை அளிக்கிறது

முதல்–மந்திரி குமாரசாமி விவசாயக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதில் இதுவரையில் எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்கவில்லை. அதனால் விவசாயக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் வரை அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் பா.ஜனதா தொடர் போராட்டங்களில் ஈடுபடும்.

மேலும் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் பல குழப்பங்கள் உள்ளன. அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. விவசாயக்கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறிய பிறகும், விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. குமாரசாமி ஆட்சியில் இதுவரை எதுவுமே சரியாக நடக்கவில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்

முக்கிய முடிவுகள்...

அதையடுத்து அவர் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அந்த கூட்டத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story