திருவண்ணாமலை தீப மலையை முற்றிலும் வனத்துறைக்கு மாற்ற நடவடிக்கை
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலை பகுதியை முற்றிலும் வனத்துறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் மலை உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மலையை சிவனாக நினைத்து தங்களின் வேண்டுதலுக்காக அதனை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இந்த மலையில் குகைகளும், சுனைகளும் உள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழாவின்போது சிகர நிகழ்ச்சியாக இந்த மலை மீது தீபம் ஏற்றப்படும். மலையில் ஏற்றப்படும் தீபத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் மலையேறி செல்கின்றனர். மற்ற நாட்களில் இந்த மலையேற அனுமதி கிடையாது. இந்த மலையின் முன் பகுதி வருவாய்த் துறையிடமும், பின் பகுதி வனத்துறையிடமும் உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் சிலர் மலையில் உள்ள குகைகளை காண்பதற்காக சென்று வழி தெரியாமல் தவிக்கின்றனர். பின்னர் போலீசாரும், வனத்துறையினரும் அவர்களை தேடி சென்று மிகவும் சிரமப்பட்டு மலையில் இருந்து கீழே அழைத்து வருகின்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கரிடம் கேட்டபோது, “இந்த மலையின் ஒரு பகுதி வருவாய்த் துறையிடமும், மற்றொரு பகுதி வனத்துறையிடமும் உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் அனுமதியின்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இந்த மலையின் ஒருபகுதி வருவாய்த்துறையிடம் உள்ளதால் வனத்துறையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
எனவே, இந்த மலையை முற்றிலும் வனத்துறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீபம் ஏற்றும் நாளில் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற நாட்களில் இந்த மலையில் ஏற அனுமதிக்கப்பட மாட்டாது. வெளிநாட்டினர் சிலர் இந்த மலையில் ஏறி வழி தவறி செல்கின்றனர். தற்போது முதல் கட்டமாக இந்த மலை ஏறக்கூடிய முக்கிய வழித்தடங்களில் ‘மலை ஏற அனுமதி இல்லை’ என்று அறிவிப்பு வாசகங்கள் அடங்கிய போர்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.
Related Tags :
Next Story