பாகூரில் நடைபெற இருந்த கவர்னர் ஆய்வுப் பணி திடீர் ரத்து
பாகூரில் நடைபெற இருந்த கவர்னர் ஆய்வுப்பணி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
பாகூர்,
புதுச்சேரி மாநில கவர்னர் கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அந்த பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்தும் வந்தார்.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதி வளர்ச்சிக்காக ‘ஸ்மார்ட் பாகூர் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. இதற்காக வாட்ஸ்–அப் குழு ஆரம்பிக்கப்பட்டு அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், சுய உதவி குழுவினர் இணைக்கப்பட்டனர். கவர்னர் கிரண்பெடி மாதம் இருமுறை ‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக மாதம் இருமுறை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கடந்த ஜூன் மாதம் 23–ந் தேதி பாகூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் அப்போது ஆய்வுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி எந்த பணியும் நடைபெறவில்லை என்று கவர்னரிடம் புகார்கள் கூறப்பட்டன.
அதற்கு கவர்னர் கிரண்பெடி இது தொடர்பாக ஆய்வுகூட்டம் ஜூலை மாதம் 21–ந்தேதி நடைபெறும் என்று பதில் அளித்தார். ஆனால் அவர் சொன்னதுபோல் ஆய்வு கூட்டம் நடைபெறவில்லை. இதற்கிடையே கடந்த மாதம் (ஜூலை) மாதம் 28–ந்தேதி பாகூர் பகுதியில் கவர்னர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கவர்னர் மாளிகையில் இருந்து புதுவை அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றை தினமும் திடீரென ஆய்வு பணிகள் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் நேற்றும் ஆய்வு மேற்கொள்வதாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றும் திடீரென ஆய்வு பணி ரத்து செய்யப்பட்டது. அதனால் அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.