போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு: கூனிச்சம்பட்டு கிராம மக்கள் முதல்-அமைச்சருடன் சந்திப்பு


போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு: கூனிச்சம்பட்டு கிராம மக்கள் முதல்-அமைச்சருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 6 Aug 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

கூனிச்சம்பட்டு கிராமத்தில் எழுந்த திரவுபதி அம்மன் கோவில் பிரச்சினையில் போலீசார் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களில் ஒரு தரப்பினர் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டனர்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு தரப்பினர் சாமி கும்பிட எதிர்ப்பு தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை எழுந்தது. இந்த சூழ்நிலையில் அந்த பிரச்சினையின் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கோவிலுக்குள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்பு மற்றும் உரிமை இயக்கத்தினர் அறிவித்து நோட்டீசு அடித்தனர்.

தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டு வரும் இந்த சூழ்நிலையில் ஆலய நுழைவு போராட்டம் என நோட்டீசு அடித்தற்கு கிராம மக்களில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆலய நுழைவு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆண்களும், பெண்களும் கோவிலுக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும், பதற்றமும் நிலவியது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் போலீசார் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனை கிராம மக்கள் ஏற்காத நிலையில் கோவில் முன்பு திரண்ட மக்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.

அதன் பின்னர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் முடிவு எடுக்கப்பட்டதை போராட்டம் அறிவித்தவர்களில் உள்ளூரை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

எனினும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூனிச்சம்பட்டு கிராமத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து நேற்று அங்கு 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கோவில் வழிபாடு பிரச்சினையில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், கும்பல் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு தரப்பிலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் என குறிப்பிட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் பரவியதும் கூனிச்சம்பட்டு கிராம மக்கள் மத்தியில் நேற்று பதற்றம் ஏற்பட்டது.

போலீசாரின் இந்த நடவடிக்கை காரணமாக அமைதியாக முடிந்த ஒரு பிரச்சினையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கிராம மக்கள் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் வழக்கு பதிவு செய்ததால் போலீசார் தங்களை கைது செய்வார்கள் என அச்சம் அடைந்த ஒரு சிலர் கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

அதனால் பிரச்சினையை மீண்டும் தொடங்கும் வகையில் போலீசாரின் நடவடிக்கை அமைந்துள்ளதாக போலீசார் மீது கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கிராம மக்களில் ஒரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நடந்த பிரச்சினை குறித்து அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். மேற்கொண்டு எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளும்படி தன்னை சந்தித்த கிராம மக்களிடம், நாராயணசாமி கேட்டுக்கொண்டார். 

Next Story