பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது


பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 6 Aug 2018 4:15 AM IST (Updated: 6 Aug 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், எம்.பி.யுமான மருதராஜா தலைமை தாங்கினார். குழுவின் செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டருமான சாந்தா, குழுவின் உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களான ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய குடிநீர் வழங்கும் திட்டம், தேசிய சுகாதாரப்பணி, அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட 29 திட்டங்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மேற்கண்ட திட்டங்களால் பயனடைந்துள்ள பயனாளிகளின் விபரம் குறித்தும் குழு உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2017-18-ம் நிதி ஆண்டிற்கு 10 எண்ணிக்கையிலான சாலைப்பணிகள் 36.605 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தேசிய சமூக பாதுகாப்பு திட்டங்களான இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத்திட்டம், விதவை ஓய்வூதியத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் 26,949 நபர்களுக்கு வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது என்பன உள்ளிட்ட அனைத்துத்துறை திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர், திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவினர் விரிவாக ஆய்வு செய்தனர். மேலும் இக்கூட்டத்தில் பேசிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும், சாலை விரிவாக்கப்பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் எடுத்துரைத்து, தேவையான திட்டங்களை உடனடியாக ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அலுவலர்களை கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் தூய்மை கணக்கெடுப்பு முனைப்பியக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூய்மை கணக்கெடுப்பிற்கான பிரசார வாகனத்தை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை செயற்பொறியாளர் கருப்பையா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகசபை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெரியசாமி, கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர்கீதா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். 

Next Story