ஜல்காவ், சாங்கிலி மாநகராட்சி தேர்தல் வெற்றி: மராத்தா மக்கள் பா.ஜனதா அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது
சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சி தேர்தல் வெற்றி மராத்தா சமுதாய மக்கள் பா.ஜனதா அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
மும்பை,
சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சி தேர்தல் வெற்றி மராத்தா சமுதாய மக்கள் பா.ஜனதா அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி
மராத்தா சமுதாய மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வன்முறைக்கு திரும்பியது. தற்போது அமைதி திரும்பிய நிலையில் வருகிற 9-ந் தேதி முதல் மீண்டும் மராத்தா சமுதாயத்தினர் தீவிர போராட்டத்தை தொடங்கப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் ஜல்காவ், சாங்கிலி மாநகராட்சிகளில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிவில், இரு மாநகராட்சிகளிலும் பா.ஜனதா அபார வெற்றிக்கண்டது.
இதில் சாங்கிலியில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை முறியடித்த பா.ஜனதா, ஜல்காவில் ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனாவையும் வென்றது. இது பா.ஜனதாவுக்கு புதிய தெம்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதிர் முங்கண்டிவார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்பிக்கையை காட்டுகிறது
இரு மாநகராட்சிகளிலும் மராத்தா சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர். இடஒதுக்கீடு பிரச்சினை எழுந்த நிலையிலும், அந்த இரு மாநகராட்சிகளிலும் நாங்கள் அமோக வெற்றி கண்டு உள்ளோம். கடந்த 15 ஆண்டு கால காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் அக்கட்சிகள் அலட்சியம் காட்டின. ஆனால் தற்போது பா.ஜனதா தலைமையிலான அரசு மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி, தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இதனை புரிந்து கொண்ட மராத்தா மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். அவர்கள் பா.ஜனதா அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை இந்த இரு மாநகராட்சி தேர்தல் வெற்றியில் பிரதிபலித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story