ஊராட்சிக்கு ரூ.28.5 லட்சம் நிதி இழப்பு: ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு


ஊராட்சிக்கு ரூ.28.5 லட்சம் நிதி இழப்பு: ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 Aug 2018 4:15 AM IST (Updated: 6 Aug 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ஊராட்சிக்கு ரூ.28.5 லட்சம் நிதி இழப்பு செய்தது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் விஜயாமணிமாறன். தி.மு.க.வை சேர்ந்த இவர், ஊராட்சி மன்ற நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஊராட்சியின் வரவு- செலவு கணக்கை ஆய்வு செய்யுமாறு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் உத்தரவிடப்பட்டது.

அதன்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, பல்வேறு கட்டங்களாக ரூ.28 லட்சத்து 5 ஆயிரத்து 419-க்கான காசோலைகள் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் முறைகேடாக வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் சுப்பிரமணியன் என்பவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம் ஊராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதற்கு காரணமாக இருந்த இளநிலை உதவியாளர் சுப்பிரமணியன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த விஜயாமணிமாறன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து பணம் கையாடல் செய்ததற்கான ஆவணங்களை அவரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஊராட்சியில் தணிக்கை செய்த ஆவணங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது.

இதனிடையே, விஜயாமணிமாறன் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டது தொடர்பாகவும், இதுபற்றி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயாமணிமாறன், மாவட்ட கலெக்டரிடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேலம் அருகேயுள்ள மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வரவு-செலவு கணக்கு களை ஆய்வு செய்து விசாரணை நடத்துமாறு ஊரக வளர்ச்சித்துறை (தணிக்கை) உதவி இயக்குனர் விஜயகுமாரிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ரூ.28 லட்சத்து 5 ஆயிரம் நிதி இழப்பு செய்தது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை (தணிக்கை) அதிகாரிகள் கூறுகையில், மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ரூ.28 லட்சத்து 5 ஆயிரம் நிதி இழப்பு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முடிவில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், இளநிலை உதவியாளர் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும், என்றனர். 

Next Story