மாவட்ட செய்திகள்

தேவாரத்தில் பூட்டிய வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் + "||" + The woman who was murdered in the locked house in Devarathil

தேவாரத்தில் பூட்டிய வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்

தேவாரத்தில் பூட்டிய வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்
தேவாரத்தில், பூட்டிய வீட்டில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தேவாரம், தேனி மாவட்டம், தேவாரம் அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி சரணமணி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். தங்கவேல் தனது மகன்களுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

சரணமணி கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவரை காணவில்லை. அவருடைய வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தேவாரத்தை சேர்ந்த அவருடைய தங்கை கார்த்திகாசெல்வி தேவாரம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரணமணியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரணமணி முகம் மற்றும் கைகளில் காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது.

தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், போடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் அங்கு வந்து அவருடைய உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.