பயிர்க்கடன் மறுக்கப்பட்டதால் விரக்தி? வங்கியில் விவசாயி விஷம் குடித்தார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


பயிர்க்கடன் மறுக்கப்பட்டதால் விரக்தி? வங்கியில் விவசாயி விஷம் குடித்தார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 6 Aug 2018 12:00 AM GMT (Updated: 6 Aug 2018 12:00 AM GMT)

அவுரங்காபாத் அருகே வங்கியில் விவசாயி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுரங்காபாத்,

அவுரங்காபாத் அருகே வங்கியில் விவசாயி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயி

அவுரங்காபாத் மாவட்டம் பைத்தானில் உள்ள சென்டிரல் வங்கி கிளைக்கு நேற்று முன்தினம் மதுக்கர் சுதம் (வயது 48) என்ற விவசாயி வந்தார். வங்கியில் வைத்து திடீரென அவர் விஷம் குடித்து விட்டார். இதை பார்த்த வங்கி அதிகாரிகள் பதறினர். உடனடியாக அவர்கள் விவசாயியை பஞ்சாத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அவுரங்காபாத் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயிர்க்கடன் மறுப்பு?

விவசாயி மதுக்கர் சுதம் பயிர்க்கடன் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை வங்கி அதிகாரிகள் மறுத்தனர். மதுக்கர் சுதம் ஏற்கனவே பயிர்க்கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடனை திருப்பி செலுத்தவில்லை. இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்துவதற்காக அவர் வங்கிக்கு அழைக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவர் விஷம் குடித்து விட்டார் என்று வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story