அணு ஆயுதமில்லா உலகம் சாத்தியமா?


அணு ஆயுதமில்லா உலகம் சாத்தியமா?
x
தினத்தந்தி 6 Aug 2018 12:35 PM IST (Updated: 6 Aug 2018 12:35 PM IST)
t-max-icont-min-icon

இப்பூவுலகம் நிம்மதியாய், அமைதியாய் தூங்கி எழ, அணு ஆயுதம் இனியும் வேண்டுமா? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஆண்டுகள் 73 உருண்டோடினாலும், உலகை உலுக்கிய அந்த துயரம் இன்னமும் நெஞ்சத்தில் துஞ்சுகிறது. உலக வரலாற்றுப் புத்தகத்தில் பதிவான அந்த கருப்பு பக்கம் இன்றும் கண்ணீர் மல்க படிக்கப்படுகிறது.

1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-வது நாள், உச்சக்கட்டத்தில் இருந்த 2-ம் உலகப்போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துகொண்டு இருந்த தருணம். வழக்கமான பரபரப்புடனே காணப்பட்டது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம். காலை 8.15 மணி முன்பு வரை, இங்கே ஒரு சுனாமி நம்மை சுருட்டி செல்ல வருகிறது என்றோ, அது அணுகுண்டு வடிவில் நம்மை அள்ளி செல்லப்போகிறது என்றோ அங்கு வசித்த அப்பாவி மக்கள் அறிந்திருக்கவில்லை.

கடிகாரம் காலை 8.15 மணியை காட்டியதுதான் தாமதம், வானில் இருந்து வெடித்து சிதறினான் வெடிகுண்டு வடிவில் வந்த எமன். சிதறியது அவன் மட்டுமல்ல. ஹிரோஷிமா நகரமும்தான்.

வானுயர்ந்த கட்டிடங்கள் தரைமட்டமாகின. நெருப்பில் வெந்த உலோகங்கள் ஆறென உருகி ஓடின. பச்சை மரங்கள் கருகி நின்றன. பற்றி எரிந்த தீப் பிழம்பு விண்ணைத் தொட்டது.

அமெரிக்கா வீசிய அந்த அணுகுண்டுக்கு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இரையாகினர். ஆயிரக்கணக்கானோர் கை, கால்களை இழந்து முடமானார்கள். பார்வை போய் குருடானார்கள். வானை இருதுண்டாக கூறுபோட்ட அழுகுரலுக்கு கூட ஆதரவு தெரிவிக்க ஆளின்றி அவர்கள் அனாதைகளாய் நின்றனர்.

இத்தனை பாதிப்பை ஏற்படுத்திய அமெரிக்கா வீசிய அணுகுண்டின் பெயர் ‘சின்ன பையன்’ (லிட்டில் பாய்). ஆனால், அவன் தந்த பரிசு மறக்க முடியாத பேரிழப்பு.

2-ம் உலகப்போரில் அமெரிக்கா பிரயோகித்த அந்த அணுகுண்டுதான், உலக வரலாற்றில் அழிவை தந்த முதல் அணுகுண்டு. அதோடு நின்றிடவில்லை, அமெரிக்காவின் வெறியாட்டம். மூன்று நாட்களில், ஜப்பானின் நாகசாகி என்ற நகரை நாசமாக்கியது, அமெரிக்காவின் அடுத்த அணுகுண்டு.

இந்த 2 அணுகுண்டு வெடிப்பில் 2 லட்சம் பேரின் உயிரை காவு வாங்கிய பிறகு 2-ம் உலகப்போர் முற்றுப் பெற்றது. ஆனால், அந்த குண்டு வெடிப்புகள் தந்த பாதிப்புகள் இன்னமும் அந்த நகரங்களில் பிரதிபலித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா, நாகசாகி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த துக்கம் அனுசரிக்கும் வேளையில், இப்பூவுலகம் நிம்மதியாய், அமைதியாய் தூங்கி எழ, அணு ஆயுதம் இனியும் வேண்டுமா? என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஏனென்றால், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் கொழுந்துவிட்டு எரிந்த கொடுமைக்கு பிறகு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே அணு ஆயுத போட்டி அதிகரித்துவிட்டது. இது மறைமுகமாகவோ, சில நேரங்களில் வெளிப்படையாகவோ தெரியவருகிறது.

இதற்கு, தன்னை வளர்ந்த நாடாக காட்டிக்கொள்ள பொருளாதார பலம் மட்டுமல்ல, அணு ஆயுத பலமும் ததும்பி இருக்க வேண்டும் என அனைத்து நாடுகளும் நம்புவதுதான் காரணம். இதனால்தான் ஒவ்வொரு நாடும் ராணுவத்தில் தன்னை பலம் மிக்கவனாக காட்டிக்கொள்ள விரும்புகிறது. குறிப்பாக, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் ராணுவத்துக்கென பெரும் நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. அணு ஆயுதங்களையும் ரகசியமாக தயாரிக்கின்றன.

அணு ஆயுதங்களை அதிகம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா அன்று தொட்டு இன்று வரை முதல் இடத்தில் இருக்கிறது. அந்த பட்டியலில், ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளுக்கும் இடம் உண்டு. இன்னும் சில நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உள்ளன.

இருந்தாலும், 2-ம் உலகப்போருக்கு பிறகு இதுவரை அணு ஆயுத தாக்குதல் நடைபெறவில்லை. இது ஒரு பக்கம் ஆறுதல் அளித்தாலும், பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய நிலையில் உலக நாடுகளில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்தால், நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருக்கும் பூமி பந்தை பலமுறை அழித்துவிடலாம். சுக்குநூறாக பூவுலகை சிதறடித்து விட முடியும்.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளிடையேயான இந்த அணு ஆயுத போட்டி, உலகின் அமைதியையும், ஆரோக்கியமான போக்கையும் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் சீர்குலைக்கலாம். இவ்வாறு, அச்சுறுத்தும் அணு ஆயுதங்களுக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியமாகும். ஆனால் அது சாத்தியம் தானா?

இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் முன்னெடுத்த அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போதிய அளவில் பலனளிக்கவில்லை. அந்த ஒப்பந்தம் விவாதத்துக்குரியதாக இருப்பதாக கருதி பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை படிப்படியாக அழிக்க முன்வரவில்லை. இதனால்தான் அணு ஆயுதமில்லா உலகம் என்பது இன்றளவும் வெற்று கோஷமாகவே இருக்கிறது.

இதற்கிடையே அணு ஆயுத சோதனையில் வடகொரியா தீவிரம்காட்டி வந்ததும், அதன் கொட்டத்தை அமெரிக்கா அடக்க நினைத்ததும் இருநாடுகளிடையே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியது. மீண்டும் அணு ஆயுத தாக்குதல் இந்த மண்ணில் அரங்கேறி விடுமோ? என்ற அச்சமும் உலக அமைதியை விரும்புவோருக்கு தொற்றியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிங்ஜாங்அன் ஆகியோரின் சந்திப்புக்கு பிறகு அபாயகரமான சூழ்நிலை மங்கியது.

அதற்குள் அமெரிக்கா, ஈரான் நாடுகள் மல்லுக்கட்ட தொடங்கி இருக்கின்றன. இது அமைதியில் முடியுமா? அழிவில் முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது.

எனவே, உலகத்தை அச்சுறுத்தும் அணு ஆயுத போட்டிக்கு முடிவு கட்ட அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டியது அவசியமாகிறது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் படிப்படியாக அவற்றை அழிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் உலகம் அமைதி பூங்காவாக திகழும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டபோது பேசிய அந்த நகர மேயர், ‘அணு ஆயுதமில்லா உலகம் வேண்டும். இது 2020-ம் ஆண்டுக்குள் கைகூட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அதையே வலியுறுத்தினார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் எஞ்சி இருக்கின்றன. இவர்களின் எண்ணமும், கனவும் நிறைவேறுமா? அல்லது ‘அணு ஆயுதமில்லா உலகம்’ என்பது வெற்று கோஷமாகவே கடந்து செல்லுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்று (ஆகஸ்டு 6-ந்தேதி) ஹிரோஷிமா தினம்.

-தமிழ்நாடன் 

Next Story