போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை தாக்கி கொலைமிரட்டல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை தாக்கி கொலைமிரட்டல்
x
தினத்தந்தி 7 Aug 2018 3:00 AM IST (Updated: 6 Aug 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரவாண்டி, 



விக்கிரவாண்டி பெரிய காலனி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகம் அருகே பாட்டுக்கச்சேரி நடைபெற்று கொண்டிருந்தது. அதேஊரை சேர்ந்த ராணுவவீரர் அருண்குமார் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக மேடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் அருண்குமாரை ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு கண்டித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் தனது ஆதரவாளர்களான அதேபகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணராஜ்(24), ரவி மகன் சங்கர்(27), கணேசன் மகன் ராஜா(20), சண்முகம் மகன் வெங்கட்(21) ஆகியோருடன் சேர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், கோவிந்தன் ஆகியோருடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அருண்குமார், கிருஷ்ணராஜ், சங்கர் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story