மாவட்ட செய்திகள்

மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பச்சை தேயிலைக்கு 3 மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி + "||" + In the Western Co-op tea factory Green tea Without paying for 3 months Farmers are dissatisfied

மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பச்சை தேயிலைக்கு 3 மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி

மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பச்சை தேயிலைக்கு 3 மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி
மஞ்சூர் அருகே உள்ள மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் விவசாயிகள் வினியோகம் செய்த பச்சை தேயிலைக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் பச்சை தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். இவ்வாறு வினியோகம் செய்யப்படும் பச்சை தேயிலைக்கு தொழிற்சாலைகள் மூலம் முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த தொகையை வைத்துக்கொண்டு தோட்ட பராமரிப்பு, தொழிலாளிகளுக்கு சம்பளம் ஆகியவை வழங்கப்படுகிறது.

மஞ்சூர் அருகே மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தங்காடு, ஓரநள்ளி, கன்னேரி, மந்தனை, ஒரக்குட்டி, சாஸ்திரி நகர் ஆகிய கிராம மக்கள் தங்களது தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலையை இந்த தொழிற்சாலைக்கு தினசரி வினியோகம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் வினியோகம் செய்த பச்சை தேயிலைக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மந்தனை உழவர் மன்ற தலைவர் மகேந்திரன் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தின் பிரதான விவசாயமாக தேயிலை தொழில் உள்ளது. இந்த தொழிலை நம்பி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். இவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை மாவட்டத்தில் அமைத்து உள்ளது. ஆரம்பத்தில் லாபத்தில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலைகள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சை தேயிலைகள் தேயிலைத்தூளாக தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சாதாரண வகை பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை வழங்கப்படுகிறது. இந்த தொகை எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை.

தேயிலை வேளாண்மை பயிராக இல்லாமல் வணிக பயிர் பட்டியலில் உள்ளது. இதன்காரணமாக மத்திய அரசு தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யாமல் உள்ளது. பச்சை தேயிலையின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதன்காரணமாக வணிக பயிர் பட்டியலில் உள்ள தேயிலையை விவசாய பயிராக அறிவித்து பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விவசாயிகள் வினியோகம் செய்த பச்சை தேயிலைக்கு முன்பணமோ அல்லது அதற்கான தொகையையோ தொழிற்சாலை நிர்வாகம் வழங்காமல் உள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலையை பறிக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவோ அல்லது தோட்ட பராமரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஒரு சில விவசாயிகள் கூலி கொடுக்க முடியாமல் கந்து வட்டிகாரர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர். அவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாததால் ஒருசில விவசாயிகள் தற்கொலைக்கு முயன்று உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் வினியோகித்த பச்சை தேயிலைக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அதிகாரிகள் கூறியதாவது:– நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் சர்வதேச தரத்தில் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேயிலைத்தூள் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் உற்பத்தி செலவினங்கள் அதிகரித்து வருவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மேற்குநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை ரூ.4 கோடி கடனில் உள்ளது. இதனால் விவசாயிகள் வினியோகம் செய்த பச்சை தேயிலைக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்க முடியவில்லை.

இதுகுறித்து இன்கோ சர்வ் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழக அரசிடம் இருந்து நிதி கோரப்பட்டு உள்ளது. தமிழக அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.