மானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு


மானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 6:54 PM GMT)

மானசரோவருக்கு சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர், மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருச்செங்கோடு,

சீனா - நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்து உள்ளது. இங்கு உள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபட்டு வருகிறார்கள். இங்கு சுற்றுலா செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரையாக சென்றார்கள். அப்போது நேபாள நாட்டின் மலைப்பகுதியில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாகவும், நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாகவும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற பக்தர்கள் உடனடியாக ஊர் திரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்டனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த சிலர் பலியானார்கள். மற்றவர்கள் இந்திய தூதரகத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 24 தமிழர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தில் உள்ள சிமிகோட் என்ற இடத்தில் தற்போது மோசமான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்க இந்திய தூதரகத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஆன்மிக யாத்திரை சென்றவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரும் ஒருவர். இவர் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மேலாண்மை இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் ஊர் திரும்ப முடியாமல் அங்கு சிக்கி தவிப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது குணசேகரன் கூறியதாவது:-

நான் உள்பட திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேர் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் கைலாய மலைக்கு சுற்றுலா சென்றோம். ஆனால் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து எங்களால் திரும்பி ஊருக்கு வரமுடியவில்லை.

தற்போது நாங்கள் சிமிகோட் என்ற இடத்தில் மலை உச்சியில் இருக்கிறோம். நேபாள நாட்டை சேர்ந்த ஒருவரது வீட்டில் நாங்கள் பத்திரமாக தங்கி உள்ளோம். அவர்தான் எங்களுக்கு உணவு கொடுத்து வருகிறார். இன்னும் ஒரு வாரம் வானிலை மோசமாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதன் பிறகுதான் நாங்கள் ஊர் திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து குணசேகரனின் மகன் வெற்றிச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனது தந்தை கடந்த 23-ந் தேதி கைலாய மலையில் உள்ள மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். அவர் ஊருக்கு திரும்பி வந்து இருக்க வேண்டும். ஆனால் சிமிகோட் பகுதியில் தற்போது மோசமான வானிலை நிலவி வருவதாகவும், கடும் பனிப்பொழிவு இருப்பதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக எனது தந்தை உள்பட பல தமிழர்கள் ஊருக்கு திரும்பி வரமுடியாமல் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். மோசமான வானிலையின் காரணமாக அந்த பகுதிக்கு விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக போதிய உணவு, மருத்துவ வசதி இல்லாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். இதுபற்றி எனது தந்தையிடம் செல்போன் மூலமாக கேட்டு அறிந்தேன்.

அப்போது அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தால் தான் எங்களை மீட்க முடியும். சிறிய ரக விமானம் வந்து செல்வதால் பெரும்பாலான பயணிகள் செல்ல முடிவதில்லை என தெரிவிக்கின்றனர்.

எனவே மத்திய அரசும், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களும் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது தந்தை உள்பட தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா யாத்திரை சென்றவர்களில் கோவை மதுக்கரையை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அதிகாரி கிருஷ்ணராஜ் (வயது 60), அவருடைய மனைவி தேவிகா (59) ஆகியோரும் அடங்குவர்.

கிருஷ்ணராஜிடம் செல்போனில் பேசியபோது அவர் கூறியதாவது:-

கடந்த 23-ந் தேதி கைலாய மலைக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டோம். சிமிகோட் பகுதியில் தற்போது இருக்கிறோம். இது 8 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரமாகும். இங்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஹெலிகாப்டரும் வந்து மீட்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. நவீன ஹெலிகாப்டர்களை அனுப்பி எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுளின் அருளால் எனது மனைவியுடன் மீண்டும் சொந்த ஊருக்கு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story