பல்லவர் கால வாகீசர் சிற்பம் கண்டெடுப்பு தென்னங்கன்றுகளை நட குழிதோண்டியபோது கிடைத்தது


பல்லவர் கால வாகீசர் சிற்பம் கண்டெடுப்பு தென்னங்கன்றுகளை நட குழிதோண்டியபோது கிடைத்தது
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 6:59 PM GMT)

தஞ்சை அருகே தென்னங்கன்றுகளை நட குழிதோண்டியபோது பல்லவர் கால வாகீசர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருடைய மகன்கள் ராஜராஜன்(வயது31), ராஜ்குமார்(30). இவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு அந்த கிராமத்தில் உள்ளது. இந்த தென்னந்தோப்பில் புதிதாக தென்னங்கன்றுகள் நடுவதற்காக நேற்று பொக்லின் எந்திரம் மூலம் குழி தோண்டினர்.

அப்போது கற்சிலை ஒன்று தென்பட்டது. அதை தோண்டி வெளியே எடுத்து பார்க்கப்பட்டது. 5 அடி உயரம் இருந்த அந்த சிலை 4 முகங்களுடன் கலை நயத்துடன் காட்சி அளித்தது. சிலையின் பின்புறத்தில் 5 தலை நாகம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிலையின் பாகங்கள் ஆங்காங்கே சேதம் அடைந்து இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் லதா, நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா ஆகியோர் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர்.

தென்னந்தோப்பில் சிலை கிடைத்தது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அந்த சிலையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சிலர் மலர் தூவி வழிபாடு செய்தனர்.

இது குறித்து ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி பேராசிரியர் சீனி.பிரபாகரன் மற்றும் புண்ணியமூர்த்தி ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில் தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதரும், ஆய்வாளருமான மணி.மாறன், சமூக ஆர்வலரும், வக்கீலுமான வெ.ஜீவக்குமார் ஆகியோர் வீரசிங்கம்பேட்டைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மணி.மாறன் கூறியதாவது:-

சோழர்களின் தலைநகராய் திகழ்ந்த தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி வடக்கே செல்லும் சாலையில் அமைந்தது கண்டியூர். அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான கண்டியூர் கோவிலையொட்டி கிழக்கு நோக்கி சென்றால் வீரசிங்கம்பேட்டையை அடையலாம். இவ்வூர் பல்லவர் காலத்தில் நந்திபுரம் என அழைக்கப்பட்டது. இங்கு பல்லவர் காலம் தொட்டு அரண்மனையும், ஆயிரத்தளி என்னும் பேரில் கோவிலும் திகழ்ந்ததை வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தன்னுடைய நந்திபுரம் என்னும் நூலில் தெரிவித்துள்ளார்.

கி.பி.750-ல் பல்லவர் காலம் தொடங்கி, கி.பி.1,218-ல் ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம் வரை கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு மேலாக பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர் வரலாற்றில் மிக சிறந்த பெருநகராக விளங்கியது நந்திபுரம் என்றழைக்கப்பட்ட இன்றைய வீரசிங்கம்பேட்டை என்னும் ஊராகும். இவ்வூரில் ஆயிரம் லிங்கங்களுடன் கூடிய பெரிய கோவில், மன்னர்களின் அரண்மனையும் இருந்தது.

பிற்காலத்தில் மாலிக்காபூர் படையெடுப்பால் தாக்குதலுக்கு ஆளாகி அழிந்துபோயிற்று. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில்(கி.பி.731-795) பின்பற்றப்பட்ட சிவமரபுகளில் ஒன்று லகுலீசபாசுபதம் என்பதாகும். தமிழகத்தில் இச்சித்தாந்தத்தை பின்பற்றிய பகுதி இப்பகுதியாகும். இச்சிந்தாந்தத்தின் சிறந்த வழிபாடாக வணங்கப்பட்ட கடவுள் வாகீசசிவன் என்ற வடிவமேயாகும். கி.பி.8, 9-ம் நூற்றாண்டுகளின் வரலாற்று பெருமையை பறைசாற்றும் வாகீசர் சிற்பம் இப்போது வீரசிங்கம்பேட்டையில் கண்டெடுக்கப்பட்டது.

இச்சிற்பம் நான்கு முகங்கள், நாற்கரங்களுடன் தாமரை பீடத்தின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்த நிலையில் அழகே வடிவாக 5 அடி உயரத்தில் பல்லவ சிற்பிகளின் உயிரோட்டமான சிற்ப நுட்பத்தை பறைசாற்றும் விதத்தில் காணப்படுகிறது. மண்ணில் புதைந்து கிடந்த வாகீசரை அப்பகுதி மக்கள் மண்ணில் இருந்து கண்டெடுத்து அமர்த்தியுள்ளனர். இதேபோன்ற பல்லவர் காலத்து வாகீசர் வடிவங்கள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்திலும், தஞ்சை மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்புறம் நிறுவப்பட்டுள்ளன.

வாகீச சிற்பங்கள் இப்பகுதியை தவிர தமிழகத்தில் வேறெந்த பகுதியிலும் காண முடியாது. தமிழகத்தில் லகுலீசபாசுபதத்தின் மையமாக திகழ்ந்த இவ்வூரில் இன்னும் எத்தனை வாகீசரும், வாகீஸ்வரியும் பூமிக்குள் புதைந்திருப்பார்களோ, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். வரலாற்றில் நந்திபுரம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் வீரசிங்கம்பேட்டை என்று பெயர் மாற்றம் பெற்றதை திருப்பூந்துருத்தி கல்வெட்டால் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story