சந்தைப்படுத்த முடியவில்லை நீரா பானத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்க வேண்டும்
சந்தைப்படுத்த முடியாததால் நீரா பானத்திற்கு விதிக்கப்பட்ட உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பேட்டி அளித்தார்.
பொள்ளாச்சி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பொள்ளாச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக அரசு நீரா பானம் இறக்க 3 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து உள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் 150 லிட்டர் நீரா இறக்குமதி செய்கின்றனர். இதை சந்தைப்படுத்த முடியாமல் அரசு தடுமாறி கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அரசாணையில் விதிக்கப்பட்டு உள்ள நிபந்தனைகளே ஆகும். அதாவது நிபந்தனைகள் இல்லாமல் பனை, தென்னை, ஈச்ச மரங்களில் இருந்து நீரா இறக்கவும், குடிக்கவும், விற்பனை செய்து கொள்ளலாம் என்றால், அதனை மதிப்பு கூட்டு பொருளாக்கி உள்நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தி கொள்ளலாம்.
கலப்படம் போன்ற தவறு கண்டறியப்பட்டால் உரிய தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்போடு நிறுத்தி கொண்டால், நீரா இறக்கி சந்தைப்படுத்துவது சாத்தியமாகும். இப்போது இருக்கிற நிலைமையில் எளிதாக, நீரா இறக்கி அதை சந்தைப்படுத்தி விட முடியாது. கறவை மாடுகளில் இருந்து பாலை கறந்து வீடுகளுக்கு பயன்படுத்தியது போக மீதியை ஆவின் போன்ற நிறுவனங்கள் கொள்முதல் செய்து தமிழ்நாடு அளவில் சந்தைப்படுத்தி கொள்வது போன்று, நீராவுக்கும் ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி, அதற்கு விதிக்கப்பட்டு உள்ள நிபந்தனைகளை நீக்கினால் மட்டுமே, அதனை இறக்கி விற்பனை செய்து, சந்தைப்படுத்த முடியும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகள் நிரம்பி கேரளா, தமிழகத்தில் கடலுக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் ஏரி, குளங்கள், தடுப்பணைகள் சீரமைக்க வேண்டும். வரத்து கால்வாயில் உள்ள ஆக்கரமிப்புகள் அகற்ற வேண்டும். ஆறுகள், நீர்நிலைகளை இணைக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலை இல்லாததால் நீர் கடலில் கலந்துகொண்டிருக்கின்றது. காவேரி தீர்ப்பில் இருக்க கூடிய தவறு திருத்தப்பட வேண்டும். அந்த தீர்ப்பில் மாதாந்திர அடிப்படையில் கர்நாடகா, தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்று உள்ளது.
தினந்தோறும் நீர்பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம்பெற வேண்டும். கர்நாடகா காவிரியில் வரக்கூடிய நீரை தீர்ப்பின் விகிதாச்சார அடிப்படையில் தினந்தோறும் பங்கீட்டு அந்தந்த மாநிலங்களுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கொடுத்து விட வேண்டும். நடப்பு ஆண்டில் ஜூன் முதல் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் உண்டான உரிமை நீர் காவேரி ஆற்று வழியாக தினந்தோறும் மேட்டூர் அணைக்கு வந்து தேக்கப்பட்டு நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி செய்திருந்தால் உபரிநீர் கடலில் கலப்பதை தவிர்த்து இருக்க முடியும்.
கர்நாடகா தமிழகத்தை ஒரு வடிகாலாக தான் வைத்து இருக்கிறது. காவிரியில் கடைமடை உரிமம் பெற்ற மாநிலம் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு ஒரே தீர்வு தினந்தோறும் நீர்பங்கீடு என்ற அம்சம் இடம்பெற வேண்டும். இதற்காக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதற்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கள் இறக்கவும், விற்பனை செய்யும் தடை உள்ளது.
கள் இயக்கம் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது. இறுதிகட்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி 21–ந்தேதி சென்னையில் ஒரு பெரிய அளவில் அசுவமேதயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இளைஞர்களை முன் நிறுத்தி அந்த யாகம் நடத்தப்படும். அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இதுசவாலாக இருக்கும். அந்த குதிரை தடுத்து நிறுத்தி வாதிட அரசும், அரசியல் கட்சிகளும் முன் வரலாம். அந்த வாதத்தில் கள் ஒரு தடை செய்ய வேண்டிய போதை பொருள் தான். கள் இயக்க கோரிக்கையில் நியாயம் இல்லை என நிரூபித்து விட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.