தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வாய்ப்பு, கலெக்டர் தகவல்
தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திட்டம் ரூ.19.74 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலத்திற்கு ஏற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழி செய்யப்படும். தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் பழப்பயிர்களுடன் ஊடுபயிர், கலப்பு பயிர், பலஅடுக்கு பயிர் வழங்கப்படும். மேலும் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரவல்ல பசுமைக்குடில்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.
விவசாய உற்பத்தி திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு மாவட்டத்திலுள்ள துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகியும், உழவன் செயலி மூலமாகவும், 04567–230832, 230328 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.