தினைக்குளம் ஊராட்சியை தத்தெடுத்து ரூ.3.38 கோடியில் வளர்ச்சி பணிகள், அன்வர்ராஜா எம்.பி. பேச்சு


தினைக்குளம் ஊராட்சியை தத்தெடுத்து ரூ.3.38 கோடியில் வளர்ச்சி பணிகள், அன்வர்ராஜா எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 7:49 PM GMT)

தினைக்குளம் ஊராட்சியை தத்தெடுத்து ரூ.3.38 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அன்வர்ராஜா எம்.பி. தெரிவித்தார்.

பனைக்குளம்,

மத்திய அரசின் சன்சத் ஆதார் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் மக்கள் தொடர்பு திட்ட முகாம் தினைக்குளம் ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்வர்ராஜா எம்.பி. தலைமை தாங்கினார். திட்ட பொறுப்பு அலுவலர் வீரப்பன் முன்னிலை வகித்தார். தினைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முனியாண்டி, யூனியன் ஆணையாளர் ரோஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ, ஜமாத் தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர் முகமது ரபீக், ஒன்றிய அலுவலக மேலாளர் மலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் தினைக்குளம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அன்வர்ராஜா எம்.பி. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அதைதொடர்ந்து அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:– எனது பாராளுமன்ற தொகுதியின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பல பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படுகின்றன. சன்சத் ஆதார் கிராம யோஜனா திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சி தத்தெடுக்கப்பட்டு ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஊராட்சி பல கிராமங்களுக்கு தாய் கிராமமாக உள்ளதால், இந்த ஊராட்சியை தத்தெடுக்க முடிவு செய்தோம். இதையடுத்து 11 குடிநீர் பணிகள், 9 கட்டிட பணிகள், 16 சாலை பணிகளுக்காக ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அனைத்து பணிகளும் விரைவாக முடிக்கப்பட வேண்டும். தினைக்குளத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story