போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்


போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 8:23 PM GMT)

போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், காதக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான் பி.எஸ்.சி., இயற்பியல் பட்டம் படித்துவிட்டு, பி.எட்., முடித்தேன். 2013–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 92 மதிப்பெண் எடுத்திருந்தேன். 2014–ம் ஆண்டில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது தகுதித்தேர்வில் வெற்றி பெற்றது 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. தகுதித்தேர்வில் நான் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளில் என்னுடைய தகுதி செல்லாமல் போய்விடும்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 2–ந் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், இனிவரும் காலங்களில் ஆசிரியர் பணி நியமனம் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வின் மூலமே ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அரசாணையின்படி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டால் என்னை போன்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையையும், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களின் வெற்றியானது 7 ஆண்டுகள் தான் செல்லும் என்ற அறிவிப்பையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.


Next Story