கூட்டுறவுத்துறை சார்பில் 381 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் பயிர்க்கடன் அமைச்சர் வழங்கினார்


கூட்டுறவுத்துறை சார்பில் 381 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் பயிர்க்கடன் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:30 PM GMT (Updated: 6 Aug 2018 8:34 PM GMT)

திருவாரூரில் கூட்டுறவுத்துறை சார்பில் 381 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரம் பயிர்க்கடனை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். டாக்டர் கே.கோபால் எம்.பி, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 381 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 66 லட்சத்து 87 ஆயிரம் பயிர்க்கடனை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர் சட்ட போராட்டங்கள் நடத்தி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். அதன்படி காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு அமைக்்கப்பட்டுள்ளது. இதனை தொடர்்நது மேட்டூர் அணையை கடந்த மாதம் 19-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு கூட்டுறவுத்துறை மூலம் ரூ.215 கோடி வழங்கப்பட உள்ளது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதலாகவும் பயிர்கடன் வழங்க அரசு தயாராக உள்ளது. தேசிய வங்கிகள் மூலம் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ரூ.2,450 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடுபொருட்கள் தேவைகேற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி சாகுபடி செய்து அதிக மகசூல் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜெயராமன், உதவி கலெக்டர் முருகதாஸ், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ணமணி, துணை பதிவாளர்கள் ஜீவா, மதிவாணன், கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிர மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story