வியாபாரியை கழுத்தை அறுத்து மகனே கொன்ற கொடூரம்


வியாபாரியை கழுத்தை அறுத்து மகனே கொன்ற கொடூரம்
x
தினத்தந்தி 7 Aug 2018 3:45 AM IST (Updated: 7 Aug 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே வியாபாரியை அவருடைய மகனே கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி, 


தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டியில் விவசாய கிணற்றில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். தண்ணீரில் ஊறியதில் முகம் சிதைந்து காணப்பட்டதால், இறந்தவர் யார்? என்று அடையாளம் காணமுடியவில்லை. இதன் காரணமாக கொலையில் துப்புதுலங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் களம் இறங்கினர். அதில் இறந்தவர் அணிந்திருந்த வெள்ளை வேட்டியில் சலவைக்கூடத்தில் போடப்பட்ட குறியீடை வைத்து விசாரணையை தொடங்கினர். அந்த குறியீடை ஆண்டிப்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளிகளிடம் காட்டி இறந்தவர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஒரு சலவை தொழிலாளி கொடுத்த தகவலின்படி, இறந்தவர் ஆண்டிப்பட்டி மீனாட்சிசுந்தரநாடார் தெருவை சேர்ந்த முருகன் (வயது 42) என்றும், ஆண்டிப்பட்டி பஸ்நிலையம் அருகே பழக்கடை வைத்து இருந்ததும் தெரியவந்தது. அதன் மூலம் இறந்தவர் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முருகனின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் முருகனை கொலை செய்ததாக அவர்கள் ஒத்துக்கொண்டனர்.

மேலும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தது அவருடைய 16 வயது மகன் என்றும், இதற்கு உடந்தையாக முருகனின் மனைவி கலைச்செல்வி, மகள் மலர் (20), மகனின் 16 வயது உடைய நண்பன் ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி கலைச்செல்வி, மகள் மலர் மற்றும் மகன், அவருடைய நண்பன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் மது குடித்துவிட்டு, வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 31-ந்தேதி இரவு 10 மணியளவில் முருகன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அம்மாவை அடித்து துன்புறுத்துவதை கண்ட மகன், மகள் மலர் ஆகியோர் தந்தையை விலக்கி விட்டு உள்ளனர். ஆனால் முருகன் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் முருகனின் கழுத்தை அறுத்துள்ளான். அப்போது மனைவி கலைச்செல்வி மற்றும் மகள் மலர் ஆகியோர் முருகனை அமுக்கி பிடித்துள்ளனர். கழுத்து அறுபட்ட முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து கொலையை மறைக்க அவர்கள் முயற்சி செய்தனர்.

அதன்படி வீட்டில் சிந்தியிருந்த ரத்தத்தை துணி மூலம் துடைத்து, அந்த துணியை தீயிட்டு கொளுத்தினர். பின்பு இறந்த முருகனின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவருடைய மகன், தனது நண்பன் உதவியுடன் டி.வாடிப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் போட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

கழுத்தை அறுத்து தந்தையை கொலை செய்த அவருடைய மகன் ஆண்டிப்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story