ரூ.70 லட்சம் மோசடி செய்த சென்னை என்ஜினீயர் கைது
குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
எரியோடு அருகேயுள்ள பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், ஆன்லைன் மூலம் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி விற்கும் வர்த்தக நிறுவனம் நடத்தினார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ரெட்டேரியை சேர்ந்த குணசேகரன், பூந்தமல்லியை சேர்ந்த என்ஜினீயர் செல்வம் ஆகியோர், சுப்பிரமணிக்கு அறிமுகம் ஆகினர்.
அப்போது குணசேகரன் சென்னையில் தனியார் நிறுவனம் நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் இருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக 2 பேரும் தெரிவித்துள்ளனர். அதை உண்மை என நம்பிய சுப்பிரமணி, தங்கம் வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். உடனே தங்கம் வாங்குவதற்கு முன்பணமாக ரூ.70 லட்சம் வேண்டும் என்று குணசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தும்படி கூறியிருக்கிறார். இதையடுத்து குணசேகரனின் வங்கி கணக்கில் ரூ.70 லட்சத்தை சுப்பிரமணி செலுத்தினார். ஆனால், பேசியபடி தங்கம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சுப்பிரமணி பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் என்ஜினீயரான செல்வம் சென்னையில் தனியார் நிறுவனம் நடத்துவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, ரைகானா மற்றும் போலீசார் சென்னை சென்று, செல்வத்தை கைது செய்தனர். மேலும் குணசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story