ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 100 சதவீதம் அமிலங்கள் அகற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 100 சதவீதம் அமிலங்கள் அகற்றப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளது. மோட்டார் மூலம் உறிஞ்ச முடியாத அமிலங்கள் அங்கேயே நீர்த்துபோக செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஜிப்சம் 40 ஆயிரம் டன், ராக்பாஸ்பேட் 23 ஆயிரம் டன் அகற்றி உள்ளோம். ஜிப்சம் முழுமையாக அகற்ற ஏற்கனவே மேலும் 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ராக்பாஸ்பேட், தாமிரதாது அகற்றுவதற்கும் கூடுதலாக 30 நாள் அவகாசம் கேட்டு உள்ளோம்.
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் தேவை குறித்து ஆய்வு செய்து திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அங்கு உள்ள 8 கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்குவதற்காக ரூ.8 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அரசாணைப்படி மூடப்பட்டு உள்ளது. அதனை திறப்பதற்கான வாய்ப்பு கிடையாது. அது போன்ற முடிவு எடுக்கப்படவில்லை.
ஆலை திறக்கப்படும் என்று வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் மாதிரிகள் சேகரித்து சோதனை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் தூய்மையான பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. இதில் ஊரக பகுதிகளில் எப்படி சுத்தமாக உள்ளது. அங்கன்வாடி, பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தூய்மையாக உள்ளதா, சுகாதார வளாகங்கள் எந்த அளவுக்கு பயன்பாட்டில் உள்ளது, திறந்தவெளியில் மலம் கழிக்கப்படுகிறதா என்பது குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.
இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி அரசு சுவர் மீது ஓவியம் வரைதல் போட்டி, அரசு அலுவலக வளாகங்களை சுத்தமாக வைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசு வழங்கப்படும். இதே போன்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மணப்பாடு மற்றும் கடற்கரை கிராமங்களில் ஒட்டுமொத்தமாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் விவசாயிகள் கோரிக்கையின் பேரில் கூடுதலாக 5 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது 1,400 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story