உதவித்தொகை தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம், முதியோர்கள் மனு
தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் முதியோர்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த முதியவர்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், முதியோர் உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். முதியோர் உதவித்தொகையை நம்பிதான் வாழ்ந்து வருகிறோம். வயதாகிவிட்டதால் வேறு வேலை எதுவும் செய்ய இயலாது. ஆகையால் எங்களுக்கு முதியோர் உதவித்தொகை தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
விளாத்திகுளம் தாலுகா சின்னவநாயக்கன்பட்டி கிராம மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியை தவிர வேறு பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்து படிப்பை தொடர ஆவலோடு இருக்கிறோம்.
அதற்கு மாற்றுச் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆகையால் எங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்கள் குறைகளையும், புகார்களையும் தெரிவிக்க வருகின்றனர். அந்த புகார்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரியை தொடர்பு கொள்வதற்கு வசதியாகவும், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் அலுவலர்களின் தொடர்பு எண்களை விளம்பர பலகையாக வைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே மேலதட்டப்பாறை பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக மின்கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மின்கம்பங்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
வசவப்பபுரம் பகுதியில் உள்ள மக்கள் நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுகொடுத்தனர். அந்த மனுவில், வசவப்பபுரம் யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், ஒரு உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.
அயன்வடமலாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வரதராஜன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், வருவாய்த்துறையில் மின்ஆளுமை மூலம் வழங்கப்படும் இருப்பிடம், வருமானம், சாதி மற்றும் ஒருநபர் சான்றுகள் தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வாரிசு சான்றிதழில் வாரிசுகளின் பெயர்கள் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. ஆகையால் வாரிசு சான்றிதழில் வாரிசுகளின் பெயர்களையும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் அம்பிகா கொடுத்த மனுவில், சாயர்புரத்தில் அதிக அளவில் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், மற்றும் தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர். இதனால் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. மக்கள் பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் சாயர்புரத்துக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேய்க்குளம் முதல் ஏரல் வரையிலான ரோட்டில் அடிக்கடி விபத்து நடக்கிறது. ஆகையால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story