சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் லெக்டர் அலுவலகத்தில் முற்றுகை


சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து  கிராம மக்கள் லெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
x
தினத்தந்தி 7 Aug 2018 3:39 AM IST (Updated: 7 Aug 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, 


நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் தாலுகா மாறாந்தை அருகே உள்ள கல்லத்திகுளம் கிராம மக்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்களது ஊரில் உள்ள சுடுகாட்டு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என்று கூறி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை அருகே உள்ள புதூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்களது ஊரில் உள்ள சூட்சமுடையார் சாஸ்தா கோவில் நிலத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் இதுகுறித்து தாசில்தாரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், பகுதி செயலாளர் அசன் ஜாபர் அலி ஆகியோர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் தென்புறம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளது. இந்த பகுதிக்கு உரிய இணைப்பு சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது எனவே இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என்று கூறி உள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலசங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்புகின்ற சில ஏஜெண்டுகள், வெளிநாடுகளுக்கு செல்கிறவர்களுடைய கையில் ஒரு பார்சலை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். அந்த பார்சலில் என்ன பொருட்கள் இருக்கின்றது என்பது அந்த நபர்களுக்கு தெரியாது. இப்படி குவைத் நாட்டுக்கு பார்சல் கொண்டு சென்ற ஒருவர், அந்த நாட்டின் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் கொண்டு சென்ற பார்சலில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நபர் குவைத் நாட்டின் சிறையில் உள்ளார். இது போன்று வெளிநாடு செல்கின்றவர்களிடம் பார்சல் கொடுத்து அனுப்புகின்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

வள்ளியூர், களக்காடு வழித்தடத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் மன கொடுத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலைவர் பழனி, செயலாளர் கற்பகம் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி பாரதிநகருக்கு நெல்லை சந்திப்பில் இருந்து அரசு பஸ் 4 முறை இயக்கப்படுகிறது. மேலும் அங்கு 2 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு மினிபஸ் நிறுத்தப்பட்டு விட்டது. நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தில் கடந்த 2006-ம்ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை இதுவரை திறக்கப்படவில்லை. எனவே அதனை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ்காந்தி நகர் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மானூர் பெரியகுளமும், பள்ளமடை குளமும் பெரிய குளங்களாகும். இந்த குளங்களுக்கு தாமிரபரணி நதியில் இருந்து மதிகெட்டான் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த பகுதி மக்கள் ஊரை காலி செய்யும் நிலை ஏற்படும். எனவே இந்த குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பணகுடி நகர பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் சங்கர், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பணகுடி நகர பஞ்சாயத்து கூட்டு குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், பணகுடி பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. சில இடங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று கூறி, தோற்பாவை கூத்து கலைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

Next Story