சொரிமுத்து அய்யனார் கோவிலில் 11-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா


சொரிமுத்து அய்யனார் கோவிலில் 11-ந்தேதி ஆடி அமாவாசை திருவிழா
x
தினத்தந்தி 7 Aug 2018 3:46 AM IST (Updated: 7 Aug 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவையொட்டி கோவில் அருகில் குடில் அமைக்கும் பணியில் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம்,


நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டுமன்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக கடந்த 2-ந்தேதி கால் நாட்டுதலுடன் விழா தொடங்கி, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோவில் அருகே குடில் அமைத்து, சமையல் செய்து தங்கியிருந்து வழிபடுவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் கோவில் அருகே தங்குவதற்கு குடில் அமைக்கும் பணியில் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வனப்பகுதியில் வனத்துறைக்கு இடையூறு இல்லாத வகையில், சமையல் செய்து சாப்பிடுவதற்கு கியாஸ் சிலிண்டருடன் வந்து தங்குகின்றனர். பக்தர்கள் தங்கும் இடத்தில் தற்காலிக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. காணிகுடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதற்காக சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் ஏதும் பக்தர்கள் கொண்டு செல்லாதபடி, வனத்துறையினர் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறதா? எனவும் சோதனை செய்யப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, பாபநாசம் பணிமனையில் இருந்து 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்வதற்கும், அங்கு சேரும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கும், விக்கிரமசிங்கபுரம் நகரசபை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Next Story