கார்- மொபட் மோதல்; மளிகை கடைக்காரர் பலி


கார்- மொபட் மோதல்; மளிகை கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2018 3:52 AM IST (Updated: 7 Aug 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே கார்- மொபட் மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏர்வாடி, 


நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சேனையர் தெருவைச் சேர்ந்தவர் பட்டரசு (வயது 39). இவர் ஏர்வாடியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பட்டரசும், அவருடைய அக்காள் செல்வியும் (50) ஒரு மொபட்டில் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றனர். மொபட்டை பட்டரசு ஓட்டிச் சென்றார். ஏர்வாடி கைக்காட்டி பகுதியில் மொபட் சென்றபோது, அந்த பகுதியில் மாவடியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஐசக் மணி என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து பட்டரசு ஓட்டி வந்த மொபட் மீது மோதி விட்டு, சாலையோர மரத்தில் மோதி நின்றது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட பட்டரசு, செல்வி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பட்டரசு பரிதாபமாக உயிரிழந்தார். செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் காரில் வந்த ஜசக் மணி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். விபத்தில் பலியான பட்டரசுக்கு மஞ்சு (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story