முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் கிரண்பெடியை வரம்பு மீறி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது, சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி


முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் கிரண்பெடியை வரம்பு மீறி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது, சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2018 12:15 AM GMT (Updated: 6 Aug 2018 11:30 PM GMT)

முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னர் கிரண்பெடியை வரம்பு மீறி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நேற்று காரைக்கால் வந்தனர். காரைக்காலில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தின் முடிவில், சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில், புதுச்சேரியில் பா.ஜனதா கட்சி சிறப்பான வெற்றியை பெரும் வகையில், கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா உத்தரவின்பேரில், புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம். தற்போது மாற்று கட்சி நிர்வாகிகள், பெண் உறுப்பினர்கள் அதிக அளவு பா.ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியுடன் அதிகார போட்டி போட்டு வந்த முதல்-அமைச்சர், தற்போது, கவர்னர் கிரண்பெடி அரசுத்துறை அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றம் சுமத்துவதோடு, வரம்பு மீறி விமர்சித்து வருகிறார். இதனை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. கிரண்பெடியை மாநில கவர்னராக பார்க்க வேண்டுமே தவிர அவரை கட்சி சார்ந்த தலைவராக பார்க்கக்கூடாது. முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் கவர்னரை வரம்பு மீறி பேசி வருவதை உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்.

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியில் எந்தவித சட்டமீறலும் இன்றி செயல்படுத்தி வருகிறார். எந்த இடத்திலும் ஆளுங்கட்சியைப்போல் அவர் ஊழல் புரியவில்லை. ஊழல் குற்றசாட்டும் கவர்னர் மீது இல்லை. அவரை மாநில கவர்னராக பார்க்கவேண்டும்.

கவர்னர் அலுவலகத்திலிருந்து வரும் உத்தரவுகளை அரசுத்துறை அதிகாரிகள் பின்பற்றியே ஆகவேண்டும். இதுதான் மாநில சட்டமுறை. இந்தியாவிலேயே மிகவும் மோசமான முதல்-அமைச்சர் யார் என்றால் அது புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமிதான். தொடர்ந்து, கவர்னருடன் மோதல் போக்கை முதல்-அமைச்சர் கையாள்வது மக்கள் நலனுக்கு எதிரான போக்கு.

இலவச அரிசி, வேலைவாய்ப்பு , விவசாயிகள் நலன், மீனவர்களின் நலன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் காரைக் கால், புதுச்சேரி பகுதி மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார்.

புதுச்சேரியில், அனைத்து அலுவலகத்திலும் லஞ்சம் வழங்காமல் வேலைகள் நடப்பதில்லை. குறிப்பாக பட்டா மாற்று விஷயத்தில், தமிழகத்தில் 3 நாளில் வேலைகள் முடிகிறது. ஆனால், நமது மாநிலத்தில் ஒரு மாதம் அதுவும் லஞ்சம் கொடுத்தால் மட்டும்தான் நடக்கிறது. இதையெல்லாம் சரி செய்யும் நோக்கில்தான் கவர்னர் கிரண்பெடி அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி உத்தரவுகளை பிறப்பிக்கிறார். கவர்னர் கிரண் பெடியின் திறமைக்கு முதல்- அமைச்சர் சான்றளிக்க தேவையில்லை. அரசுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் கவர்னர் மீது பழி போடுவது முதல்-அமைச்சருக்கு கைவந்தகலை. இனி அது எடுபடாது.

நியமன உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 25 சதவீதம் காரைக்கால் பிராந்திய வளர்ச்சிக்காக செலவு செய்யப்படும். மேலும், 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். மேலும், மாநில அந்தஸ்து கோரிக்கையை பா.ஜனதா கட்சி எதிர்க்கவில்லை. ஆனால் மாநில மக்களின் எண்ணம், வளர்ச்சிக்கான வழி எது என்பதை ஆராய்ந்து, முடிவு செய்வோம். 25 ஆண்டு காலம் மத்தியில் பல்வேறு துறையின் கீழ் இருந்த நாரா யணசாமி ஏன் மாநில அந்தஸ்து பெற முயற்சிக்கவில்லை என்பதை முதலில் தெளிவு படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story