வருகிற சட்டமன்ற தேர்தலில் தொகுதி மக்களுக்கு நன்மை தரும் கட்சியில் இணைந்து போட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உறுதி
வருகிற சட்டமன்ற தேர்தலில் தொகுதி, மக்களுக்கு நன்மை தரும் கட்சியில் இணைந்து போட்டியிடுவேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் உறுதி கூறினார்.
புதுச்சேரி,
கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வைத்தியநாதன் வெற்றி பெற்றார். 2016–ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசில் இடம் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தலுக்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வந்தார்.
இதற்கிடையே அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வைத்தியநாதன் மீண்டும் அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் கமலா அறக்கட்டளை சார்பில் ஜீவானந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கமலா அறக்கட்டளையின் மூலமாக கடந்த 6 ஆண்டுகளாக என் சொந்த பணத்தில் முடிந்த அளவு சேவை செய்து வருகிறேன். நான் தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பவன் அல்ல. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அதன் பிறகும் தினந்தோறும் மக்களை சந்தித்து வருகிறேன். அறக்கட்டளையின் சார்பில் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட இலவச பயிற்சிகளை அளித்து வருகிறேன். மேலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன்.
நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது என்னிடம் இருந்த சிலர் தற்போது உடன் இல்லை. அதைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. நான் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சிலர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். புதிதாக சிலர் உருவாகலாம். அவர்கள் நமது தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் உறுதியாக தொகுதிக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடிய கட்சியில் இணைந்து போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.