நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களின் மனநிலை மாறும் பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை


நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களின் மனநிலை மாறும் பா.ஜனதாவுக்கு சிவசேனா எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2018 11:31 PM GMT (Updated: 6 Aug 2018 11:31 PM GMT)

மாநகராட்சி தேர்தல் வெற்றியை பா.ஜனதா கொண்டாடும் நிலை யில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் களின் மனநிலை மாறும் என்று அக்கட்சிக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை,

சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சிகளுக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இந்த இரு மாநகராட்சிகளிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் வெற்றி அமைந்து இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது. இதை ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக தாக்கி விமர்சித்து உள்ளது.

இது தொடர்பான அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இரு மாநகராட்சிகளிலும் கிடைத்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்றால், பால்கர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு பா.ஜனதா போராடியது ஏன்?. பண்டாரா-கோண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அக்கட்சி தோற்றது ஏன்?.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலுபிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். சிறந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வரும் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தேர்தலில் பின்னடைவை சந்திக்கிறார்.

சாங்கிலி, ஜல்காவ் மாநகராட்சிகளில் பா.ஜனதா வெற்றி கண்டதை அடுத்து நீங்கள் (பா.ஜனதா) வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story