‘உலகில் உள்ள மொழிகளில் இளமை மாறாமல் இருப்பது தமிழ் மொழி’ வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
உலகில் உள்ள மொழிகளில் இளமை மாறாமல் இருப்பது தமிழ் மொழி என்று வி.ஐ.டி.யில் நடந்த பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
வேலூர்,
வி.ஐ.டி.யில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடந்தது. மன்ற நிர்வாகி பேராசிரியர் மரியசெபாஷ்டின் வரவேற்றார். நிகழ்ச்சியில் பாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி கடந்தாண்டு மன்றப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்துள்ள கலைமாமணி விருது பெற்ற கவிஞர் பாரதி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பேரன் ஆவார். இவர் இந்நிகழ்ச்சிக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை ஒரு முறை படித்துவிட்டால் தமிழன் என்ற பெருமை வந்து விடும். உலகில் தொன்மையான மொழிகளில் மாறாமல் இருப்பது தமிழ் மொழி ஒன்றுதான். சீன மொழி நமது தமிழ் மொழியை விட 500 ஆண்டுகள் பின் தங்கியவையாகும். உலகில் உள்ள மொழிகளில் இளமை மாறாமல் இருப்பது தமிழ் மொழியாகும். அதன் வளமையுடன் யாராலும் போட்டிபோட முடியாது.
இன்று தமிழர்களே தமிழை கைவிடும் நிலை வந்து விட்டது. சுத்தமான தமிழ்மொழியை கேட்க வேண்டுமானால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நாம் தமிழை கேடயமாக பயன்படுத்தினால் நமக்கு வெற்றி கிட்டும். எனவே, தமிழ் மொழியை காக்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்க தமிழ் இயக்கம் வேலூரில் தொடங்கியுள்ளோம். திருக்குறளில் வாழ்க்கைக்குரிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கு இணையான நூல் இன்றுவரை வேறு இல்லை. தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கும் தொகையை அதிகரிக்க கோருவோம்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி பேசுகையில், “என் இனிமை தமிழ்மொழி என்ற பாடலை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எல்லா மேடைகளிலும் பாடி செல்வார். கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தமிழ் மொழி வளர்ச்சிக்காக உலகளாவிய இயக்கம் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது” என்றார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல்காதர், வி.ஐ.டி. சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி டீன் ரேவதி, வேலூர் தமிழ்சங்க நிர்வாகிகள் புலவர் பதுமனார் சுகுமார், மன்ற நிர்வாகிகள் சுதாகரன், பாலாஜி, செல்வகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையொட்டி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மாணவி அதிசயா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story