நாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பதிலடி


நாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பதிலடி
x
தினத்தந்தி 7 Aug 2018 6:00 AM IST (Updated: 7 Aug 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது என்று கவர்னர் கிரண்பெடி நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்வதும் பின் சிறிது காலம் அமைதியாக இருப்பதும் வாடிக்கையான நிகழ்கிறது. குறிப்பாக இருவரும் அதிகார போட்டியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில், தனது ஆய்வுப்பணிகள் குறித்து வெளியிட்ட கவர்னர் கிரண்பெடி, ஆய்வுகளின் போது பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் அலுவலகத்தின் பொறுப்பு மற்றும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள் இதுபோன்ற எதிர்மறை அறிக்கைகளால் குறைத்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்பாடுகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தின் வேகத்தை குறைக்கும் என்பதை முதல்-அமைச்சர் உணர்ந்தாரா? என்பது எனக்கு தெரியவில்லை.

புதுச்சேரியின் முன்னேற்றம் அவருக்கு முதன்மையானதாக இருந்தால் இதுபோன்ற கருத்துகளை வெளியிடமாட்டார். கவர்னர் அலுவலகத்தின் பொறுப்புகள் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவற்றை படிக்கவேண்டும்.

நான் புதுச்சேரியில் 26 மாதங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். கூட்டு முயற்சிகளை முதல்-அமைச்சர் பலகீனப்படுத்தாமல் ஆதரவு அளித்து இருந்தால் அனைத்து வகையிலும் இந்திய அளவில் புதுச்சேரி முதல் இடத்தில் இருந்திருக்கும்.

கவர்னர் மாளிகை எப்போதும் சட்ட விதிகளை பின்பற்றியே மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்கி மக்கள் மாளிகையாக விளங்கி வருகிறது. மூத்த அரசு அதிகாரிகள் தங்களின் செயல் திறனை மதிப்பீடு செய்யும் அதிகாரம் மிக்கவர் கவர்னர் என்றே அறிந்துள்ளனர். எனவே அவர்களின் இறுதி மதிப்பீடு கவர்னர் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.

முதல்-அமைச்சரின் இதுபோன்ற கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதி க்கின்றது. அதிகாரிகளை குழப்புகிறது. நமது செயல்திறன் நிலைத்திருக்கவேண்டும். நமது நோக்கத்திற்காக நாம் இணைந்து தெளிவாக செயல்பட வேண்டும். நான் ஒன்றாக இணை ந்து செயல்பட்டு சேவைகளையும், பொறுப்புகளையும் மேம்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

புதுச்சேரியின் எதிர்காலத்திற்காக கடந்த கால தவறுகளை சரிசெய்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோ ம். இது கவர்னர் கிரண்பெடியின் உத்தரவு அல்ல. கவர்னர் அலுவலக உத்தரவு.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி அந்த பதிவில் கூறியுள்ளார்.

Next Story