வர்த்தக மையங்களா கல்வி கூடங்கள்?
சில காலமாக கல்விக் கூடங்கள் வியாபார மையங்களாக மாறிவிட்டதோ என்னும் எண்ணம் எல்லோர் மனதிலும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது.
‘விலைபோட்டு வாங்கவா முடியும்?-கல்வி வேளைதோறும் கற்று வருவதால் படியும்!’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் இந்த அரிய கவிதை வரிகள் இன்றைய நாட்களுக்கு மிகப் பொருத்தமான ஒன்றாகி வருகிறது. சில காலமாக கல்விக் கூடங்கள் வியாபார மையங்களாக மாறிவிட்டதோ என்னும் எண்ணம் எல்லோர் மனதிலும் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. பெண்பால் பேராசிரியர்கள் கூட, மானுடம் வெட்கப்படும் அளவிற்கான அவலங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். அதிலும் விடைத்தாள் திருத்தும் பணியில் நடைபெற்றதாய் கூறப்படும் மோசடிகள் பற்றி கேள்விப்படும்போது மனதுக்குள் ஒருவித மனமயக்கம் மண்டிவிடுகிறது. இந்த அவலத்திற்கு யார் காரணம்? என்று கண்டுபிடித்து களையெடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இந்த சமூக அவலத்திற்கு நம்மை சூழ்ந்து இருக்கும் ஒட்டுமொத்த சமுதாயமும் மனசாட்சியோடு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த அநீதியின் அஸ்திவாரம் எங்கே இருக்கிறது? ஆய்வு செய்வோமா? காசு கொடுத்தால் மதிப்பெண்களில் மாற்றம் வரும். தயங்காமல் பணம் தாருங்கள். விதி மீறி உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்னும் போலி ஆசிரியர்களின் பொறுப்பின்மையா? அல்லது விலை கொடுத்தேனும் வெற்றியை பெற்றிட வேண்டும் என்னும் மாணவர்களின் யாசக மனப்பான்மை காரணமா? எதுவாய் இருந்தாலும் இந்த இரு நிலைகளுக்கும் நம் சமுதாயத்திற்குள் வளர்ந்திருக்கும் சில ஒழுக்கமற்ற சிந்தனைகளே காரணம்.
ஆம்! கல்வி என்பது வாழ்வியல் பொருளாதாரத்தின் படிக்கட்டு என்னும் சிந்தனை இங்கே வளர்க்கப்பட்டு வருகிறது. என் பிள்ளை ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க கம்பளம் விரிக்கும் நாடு உண்டா? என்று தேடும் அவலம் நம் மண்ணில் வளர்ந்து வருகிறது.
அதன் நீட்சியே இந்தி கற்றால் இந்தியாவில் வேலை கிடைக்கும் என்னும் கடைசி அவலம். ஆனால் இந்தியாவின் பிற மாநில சகோதரர்களுக்கு வேலை தரும் மாண்புமிக்க மண்ணாக நம் தமிழகம் என்றும் திகழ்கிறது என்பதை பலரும் வசதியாக மறந்துவிட்டார்கள்.
கல்வி என்பது வேலைக்கான வித்து என்பதும், வளர்ந்து விருட்சமானால் பணம் தரும் பங்காளி என்னும் சிந்தனையை இங்கே இருக்கிற சில கல்விக்கூட விளம்பரங்களில் பரப்பப்படுகிறது. இந்த அநியாய அவலமே இன்றைய நிலைகளுக்கு காரணம். இதுவரை நாம் காணாத ரணங்களுக்கும் காரணம். நம் மனநிலை மாறவேண்டும். சொந்தமோ, பந்தமோ, சூதிலா வாழ்வே சூழவேண்டும்.
வேரினிலே வெந்நீரை விதைப்போரை மறுதலிப்போம். நம் மனசாட்சிக்கு மட்டும் பதிலளிப்போம்.
-கவிஞர் மோசே
Related Tags :
Next Story