தரணி போற்றும் தத்துவ கவிஞர்
இன்று (ஆகஸ்டு 7-ந்தேதி) ரவீந்திரநாத் தாகூரின் நினைவு தினம்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமை ரவீந்திரநாத் தாகூரைச் சாரும். தரணி போற்றும் தத்துவ ஞானியான அவர் கவிஞர், இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர்.
ரவீந்திரநாத்தாகூர் கொல்கத்தாவில் 1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பிறந்தார். பெற்றோர் தேவந்திரநாத்-சாரதாதேவி. இளம் வயதிலேயே தாயார் இறந்துவிட்டார்.
தாகூர் ஓரியண்டல் செமினரி பள்ளியில் தொடக்க கல்வி பெற்றார். பள்ளிக்கு செல்வதை அவர் துன்பமாகவே கருதினார். இதனால் ஆசிரியர்கள் பலரும் அவருடைய வீட்டுக்கே வந்து பாடம் கற்பித்தனர். தனது எட்டாவது வயதிலேயே கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டினார். வங்கமொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் அதிக நாட்டம் கொண்டு இருந்தார்.
1873-ம் ஆண்டு தந்தையாருடன் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இமயமலை, அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் அவர்கள் தங்கினர். அங்கே தாகூர் வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களை படித்தார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதைகள், வரலாறுகளை படித்தார்.
பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் சென்றார். லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்றார். ஆனால் சேக்ஸ்பியர் உள்ளிட்ட கவிஞர்களின் படைப்புகளை ஆராய்ந்தார். இதனால் பட்டம் பெறாமலேயே 1880-ம் ஆண்டு இந்தியா திரும்பிவிட்டார். பிறகு ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையில் பயணிக்கத் தொடங்கினார்.
ரவீந்திரநாத் தாகூர் 1883-ம் ஆண்டு மிருனாலி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என ஐந்து குழந்தைகள் பிறந்தன.
தாகூர் தனது 16-வது வயதிலேயே பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20-வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார்.
1884-ம் ஆண்டு கோரி-ஒ-கமல் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும் அவர் ராஜா-ஒ-ராணி, விசர்ஜன் என்ற நாடகங்களையும் இயற்றினார். இவர் இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். அந்த வகையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி மெட்டும் அமைத்தார்.
அவற்றில் ‘ஜன கண மன’ என்னும் பாடல் இந்திய தேசிய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது. வங்காள இலக்கியத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார்.
1893-ம் ஆண்டு முதல் 1990 வரை ஏழு கவிதைத் தொகுப்புகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் கனிகா போன்றவற்றை எழுதினார். 1901-ம் ஆண்டு பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார்.
1909-ல் தாகூர் ‘கீதாஞ்சலி’யை எழுதத் தொடங்கினார். 1913-ம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி படைப்புக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1915-ம் ஆண்டில் தாகூருக்கு ஆங்கிலேயே மன்னர் ஜார்ஜ் ‘சர்’ என்ற வீரப்பட்டம் வழங்கினார். கர்சன்பிரபு, வங்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார். இதை எதிர்த்து தாகூர் போராடினார்.
1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து தாகூர் தனக்கு வழங்கப்பட்ட ‘சர்’ பட்டத்தை துறந்தார்.
அவர் காந்திஜியின் ஆதரவாளராக இருந்தாலும், அரசியலில் இருந்து சற்று விலகியே இருந்தார். காந்திஜியை ‘மகாத்மா’ என்று முதன் முதலாக அழைத்ததும் இவர்தான்.
1921-ல் தாகூர் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். இதற்காக பல நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினார். மேலும், அவர் தனது படைப்புக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத் தொகை அனைத்தையும் அந்த பல்கலைக்கழகத்துக்காக கொடுத்தார்.
தனது 60-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள், உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
தாகூர், மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவராக திகழ்ந்தார். 1940-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் சாந்திநிகேதனுக்கே வந்து ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கினர்.
1941-ம் ஆண்டு தாகூரின் 80-வது பிறந்தநாள் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி அவர் மரணம் அடைந்தார்.
சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர் என்றெல்லாம் போற்றப்படும் ரவீந்திரநாத் தாகூர் உடலால் மறைந்திருந்தாலும், அவரின் படைப்புகளால் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.
-எஸ்.சாந்தி, வங்கி அதிகாரி
Related Tags :
Next Story