கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:00 PM GMT (Updated: 7 Aug 2018 11:46 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை 

மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடி வசூலை கைவிட வேண்டும், இன்சூரன்சு பிரிமியம் தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர்.

வேலைநிறுத்தம் 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் மோட்டார் வாகன தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரும்பாலான லாரி, ஆட்டோ, வேன், டாக்சி உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்கின. அரசு பஸ்கள் 100 சதவீதம் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பல ஆட்டோ, வேன்கள் இயக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டம் 

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடி நகர அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் வி.முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யு. சிவராமன், சங்கரபாண்டி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் முருகன், ஐ.என்.டி.யு.சி ராஜகோபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story