நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கண்டக்டர் இல்லாத பஸ்களுக்கு டிக்கெட் வழங்க வைக்கப்பட்ட கவுண்ட்டர் அகற்றம்


நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கண்டக்டர் இல்லாத பஸ்களுக்கு டிக்கெட் வழங்க வைக்கப்பட்ட கவுண்ட்டர் அகற்றம்
x
தினத்தந்தி 8 Aug 2018 3:00 AM IST (Updated: 7 Aug 2018 8:38 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கண்டக்டர் இல்லாத பஸ்களுக்கு டிக்கெட் வழங்க வைக்கப்பட்ட கவுண்ட்டர் அகற்றப்பட்டது.

நெல்லை, 

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கண்டக்டர் இல்லாத பஸ்களுக்கு டிக்கெட் வழங்க வைக்கப்பட்ட கவுண்ட்டர் அகற்றப்பட்டது.

டிக்கெட் கவுண்ட்டர் 

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சமீபத்தில் கண்டக்டர் இல்லாத புதிய பஸ் சேவைகளை தொடங்கியது. இந்த பஸ்கள் புறப்படும் இடத்தில் இருந்து சேரும் இடம் வரை எங்கும் நிற்காது. இந்த பஸ்சில் பயணம் செய்வோர் பஸ் நிலையத்தில் உள்ள இதற்கான டிக்கெட் கவுண்ட்டரில் முன்கூட்டியே டிக்கெட் வாங்கி செல்ல வேண்டும்.

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு இந்த வகை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நாகர்கோவில் பஸ்கள் நிறுத்தப்படும் 1–வது பிளாட்பாரத்தில் மேஜை போட்டு ஊழியர்கள் எந்திரம் மூலம் டிக்கெட் வழங்கி வந்தனர். பின்னர் டிக்கெட் வழங்குவதற்கு வசதியாக இரும்பு பெட்டி கடை போன்ற டிக்கெட் கவுண்ட்டர் பெட்டியை ஓரிடத்தில் வைத்தனர்.

ஆனால் இந்த டிக்கெட் கவுண்ட்டர் பிளாட்பாரத்தையொட்டி அமைந்திருந்ததால் பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. மேலும் இந்த பெட்டியை வைப்பதற்கு மாநகராட்சியில் அனுமதி பெற வில்லை என்றும் கூறப்படுகிறது.

திடீர் அகற்றம் 

இந்த நிலையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட டிக்கெட் கவுண்ட்டர் பெட்டியை அகற்றுமாறு மாநகராட்சி சார்பில், அரசு போக்குவரத்து கழகத்துக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த டிக்கெட் கவுண்ட்டர் பெட்டியை அகற்றவில்லை. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு இருந்த டிக்கெட் கவுண்ட்டரை அகற்றினர். பின்னர் அதனை ஒரு லாரியில் ஏற்றினர்.

இதைக்கண்ட போக்குவரத்து கழக ஊழியர்கள், டிரைவர், கண்டக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த போக்குவரத்து கழக நெல்லை பொது மேலாளர் துரை ராஜ் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் முறையான அனுமதி பெற்று டிக்கெட் கவுண்ட்டர் அமைக்குமாறு பதில் அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள சாலையோரத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பெட்டி கீழே இறக்கி வைக்கப்பட்டது. இந்த பிரச்சினையால் போக்குவரத்து கழக ஊழியர் டிக்கெட் வழங்கும் எந்திரத்தை தரையில் வைத்து பயணிகளுக்கு டிக்கெட் வழங்கினார்.


Next Story