கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு


கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 3:00 AM IST (Updated: 7 Aug 2018 10:26 PM IST)
t-max-icont-min-icon

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் 4 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி நேற்று மாலை முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. பொது மக்கள் நலன்கருதி இரவு நேரம் பஸ்நிலையங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து திருவந்திபுரம் வழியாக அரசு பஸ் பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

குயிலாப்பாளையம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பஸ்சை வழிமறித்து கல்வீசி தாக்கிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய தகவல் அறிந்து நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பஸ் அங்கிருந்து பண்ருட்டிக்கு புறப்பட்டு சென்றது.

இதேபோல் சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு பஸ் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வந்தது. அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த மர்மநபர் திடீரென பஸ் மீது கற்களை வீசினால். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைத்தது. உடனே அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு பஸ் திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்தது. அப்போது மர்மநபர் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்தது. கூட்டேரிப்பட்டில் சென்ற அரசு பஸ் கண்ணாடியும் கல்வீசி உடைக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் எதிரொலியால் இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பஸ்டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story