தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைப்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 4:30 AM IST (Updated: 8 Aug 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் நேற்று மாலை அடைக்கப்பட்டன.

தர்மபுரி,

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று மாலை உயிர் இழந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன.

கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதே போல மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் நேற்று மாலை 4 மணி முதல் கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. அனைவரும் அவசர, அவசரமாக தங்களின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி சென்றார்கள்.

கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்ட போதே மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 1,200 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள 114 டாஸ்மாக் கடைகளையும் நேற்று மாலை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதே போல கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள் இரவு ரத்து செய்யப்பட்டன. அவை அனைத்தும் டெப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நகர பகுதிகளுக்கு மட்டும் சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்றன.

அதேபோல பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் இயக்கப்பட இருந்த ஆம்னி பஸ்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. கர்நாடக அரசு பஸ்களும் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. வேப்பனப்பள்ளியில் நேற்று இரவு கடைகள் அடைக்கப்பட்டன. தி.மு.க.வினர் சாலையில் டயர்களை போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து இரவில் சென்னை செல்லும் 7 ஆம்னி பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.மாவட்டத்தில் உள்ள 18 சினிமா தியேட்டர்களில் மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தர்மபுரி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. தர்மபுரி புறநகர் பஸ்நிலையம் மற்றும் டவுன் பஸ்நிலையம் ஆகியவற்றில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இரவு 7 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டன.முக்கிய ஊர்களுக்கு ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. 

Next Story