திருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவு 3 கிலோ தங்கம் பறிமுதல்


திருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவு 3 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:15 PM GMT (Updated: 7 Aug 2018 7:13 PM GMT)

திருச்சி விமானநிலையத்தில் 3 நாட்களாக நடந்து வந்த சி.பி.ஐ. சோதனை நிறைவுபெற்றது. கைதான பயணிகளிடம் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி,

திருச்சி விமானநிலையத்திற்கு கடந்த 5-ந்தேதி மாலை மதுரையில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென வந்தனர். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 70 பயணிகளை பிடித்து, அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் சுங்க வரி கட்டாமல் பல பொருட்களை வெளியில் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக இருப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதும் தெரிந்தது. இதையடுத்து குறிப்பிட்ட சில பயணிகளை மட்டும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் 13 பேர் குருவிகளாக (பொருட்களை கடத்தி வருபவர்கள்) செயல்பட்டு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசுலு, கண்காணிப்பாளர்கள் கழுகசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த், கவுதம், அலுவலக ஊழியர் பிரடி எட்வர்ட், பயணிகள் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ், திருச்சியை சேர்ந்த தமயந்தி, அவரது கணவர் தீவகுமார், மனோகரன் முத்துக்குமார், அப்துல்ரமீஸ், கனகா, சாந்தி, ராமலட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையை சேர்ந்த மகேஷ்வரன், சுரேஷ் ஆகிய 19 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக விசாரணை நீடித்தது. கைதானவர்களை தவிர மற்ற பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு பின் விடுவித்தனர். குருவிகளாக வந்த பயணிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது தங்ககட்டி ஒன்றை விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வருகை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருக்கும் மேஜையில் மறைத்து வைத்திருப்பதாக தமயந்தி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்து சென்று அந்த இடத்தை சோதனையிட்டனர்.

அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் நிற்பதற்கு வசதியாக அமைக்கப்பட்ட 2 மேஜைகளை கவிழ்த்து சல்லடை போட்டு தேடினர். இதில் ஒரு தாளில் மறைத்து வைக்கப்பட்ட சிறிய தங்ககட்டி ஒன்றை கைப்பற்றினர். அதன் எடை 800 கிராம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விசாரணையில் தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டதையும், அணிகலன்களாக தங்க நகைகள் கடத்தி வரப்பட்டதையும் கைதான பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கைதானவர்கள் அணிந்திருந்த நகைகள், மோதிரம் மற்றும் மறைத்து வைத்திருந்த சிறிய தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 கிலோ தங்கம் வரை கைப்பற்றப்பட்டதாக விமானநிலைய வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் சிங்கப்பூர் டாலர், இந்திய மதிப்பில் ரூ.9 லட்சத்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை 4.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்தது. இதையடுத்து கைதான 19 பேரையும் ஒரு தனி பஸ்சில் ஏற்றி மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்த அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள், மதுபான வகைகள், சிகரெட் பாக்கெட்டுகள், வத்தல், மிளகு உள்ளிட்ட பொருட்களையும் மூட்டை, மூட்டையாக கட்டி அதே பஸ்சில் ஏற்றி கொண்டு சென்றனர். கைதான உதவி ஆணையர் உள்பட சுங்கத்துறையை சேர்ந்த 6 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக விமானநிலைய வட்டாரத்தில் தெரிவித்தனர். கைதான 19 பேரின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதிலும் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்அடிப்படையில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story