தீக்குளித்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு


தீக்குளித்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 7:47 PM GMT)

தீக்குளித்த கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் கவுசல்யா (வயது 18). அதே ஊரை சேர்ந்த கலியபெருமாள் மகன் வீரமணி (21). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் 6மாத கர்ப்பிணியான கவுசல்யாவுக்கும், வீரமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கவுசல்யா கடந்த 29-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீக்காயமடைந்த கவுசல்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கவுசல்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜ் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கவுசல்யா-வீரமணிக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கவுசல்யா சாவுக்கு அவரது கணவர் வீரமணி, மாமனார் கலியபெருமாள் (50), மாமியார் ஜோதி (48), வீரமணி சகோதரர் வீரபாண்டியன் (30), சகோதரி வெண்ணிலா (23) ஆகியோர் தான் காரணம் என்று கூறி அவர்களை கைது செய்யக்கோரி ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை உள்ளது என்றும், விசாரணை முடிந்து கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story