விவேகானந்தா நகரில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொது மக்கள் முடிவு


விவேகானந்தா நகரில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொது மக்கள் முடிவு
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 7:58 PM GMT)

மாத்தூர் ஊராட்சி விவேகானந்தா நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தது விவேகானந்தா நகர். இங்கு 1800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மாத்தூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவேகானந்தா நகருக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதிலும் கடந்த 2 வாரங்களாக அங்கு உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதி அடைந்து வருவதுடன் கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்தி வரும் நிலை உள்ளது.

மேலும் குளிப்பதற்கும் வீட்டு பயன்பாட்டிற்கும் வெகுதொலைவிற்கு சென்று தண்ணீரை எடுத்து வரும் நிலை உள்ளது. மாத்தூர் ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி குடிநீரும் சரியாக வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து மாத்தூர் ஊராட்சி செயலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர்களிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “மாத்தூர் விவேகானந்தா நகர் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஆபரேட்டர் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீரை திறந்து விடுவதில்லை. இதனால் பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் எப்போது தண்ணீர் வரும் என்று காலையில் இருந்து குடத்துடன் காத்து இருக்கும் நிலை உள்ளது.

மேலும் நேற்றுமுன்தினம் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இயற்கை மரணம் அடைந்தார். அவருக்கு ஈமச்சடங்கு செய்யவும் தண்ணீர் கிடைக்காமல் அவரது உறவினர்கள் அலைந்தது பரிதாபமாக இருந்தது. எனவே மாத்தூர் ஊராட்சி விவேகானந்தா நகருக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்”.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story