தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 3:15 AM IST (Updated: 8 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானதால் தேனி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தேனி, 



தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று காலமானார். இதனால், தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நேற்று மாலையில் இருந்து நிறுத்தப்பட்டது. தேனியில் இருந்து தினமும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் 12 பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுவது வழக்கம். இந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

அதேபோல் தேனி, கம்பம், ஆண்டிப்பட்டி பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு தினமும் சுமார் 50 தனியார் சொகுசு பஸ்கள் இயக்கப்படும். அவை அனைத்தும் நேற்று இயக்கப்படவில்லை. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. அரசு பஸ்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டன.

கருணாநிதி காலமான தகவல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேனி நகரில் கடைகள் அடைக்கப்பட்டன. இரவு 7.30 மணியளவில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அதேபோல், மாவட்டம் முழுவதும் கடைகளை வியாபாரிகள் முன்கூட்டியே அடைத்துவிட்டனர். முன்னதாக டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணிக்கே அடைக்கப்பட்டன.

சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நேற்று மாலையிலேயே மூடப்பட்டன. இதனால் மற்ற பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் சென்றனர்.

ஆண்டிப்பட்டி பகுதியில் இயங்கி கொண்டிருந்த ஆட்டோ, வேன், கார் போன்ற வாகனங்கள் அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் ஆண்டிப்பட்டியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் பயணிகளோடு பாதி வழியில் நிறுத்தப்பட்டது. ஆண்டிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவுக்கு நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் இயக்கப்பட்ட டவுண் பஸ் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் பாதிவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தவித்தனர்.

கம்பம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் துரை நெப்போலியன் தலைமையில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி கோஷங் களை எழுப்பினர்.

மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விடுமுறையில் இருந்த போலீசாரும் பணிக்கு அழைக்கப்பட்டனர். பஸ் நிலையங்கள், கடை வீதிகள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story