மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Aug 2018 9:45 PM GMT (Updated: 7 Aug 2018 8:25 PM GMT)

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கம்போல் வாகனங்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

தேனி,


மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி வரி வசூலை கைவிட வேண்டும். வாகன காப்பீட்டு தவணை தொகை பல மடங்கு உயர்த்தியதை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தேனி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்த போதிலும், பஸ்கள், ஆட்டோக்கள் நேற்று வழக்கம் போல் ஓடின. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சுமார் 350 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 97 சதவீதம் பஸ்கள் நேற்று இயங்கின. அதேபோல் மாவட்டம் முழுவதும் 90 சதவீதம் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

பஸ், ஆட்டோக்கள் போக்குவரத்து போதிய அளவில் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. வேலை நிறுத்தம் அறிவிப்பு காரணமாக மக்கள் பலரும் வெளியூர் செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தது தெரியவருகிறது. இதனால், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தேனியில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடந்தது.

இதற்காக தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் விலக்கில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். இவர்கள், தேனி-மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். அவர்களை நேரு சிலை சிக்னல் அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன், ஏ.ஐ.யு.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். மறியலின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

மறியல் செய்த நிர்வாகிகள் உள்பட மொத்தம் 71 பேரை தேனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அதேபோல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் நிலையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக சாலையில் உள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் வந்தனர். 

Next Story