சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதிகளில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க உதவி மையம்


சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதிகளில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க உதவி மையம்
x
தினத்தந்தி 8 Aug 2018 5:00 AM IST (Updated: 8 Aug 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

அரசு விடுதிகளில் குறைகள் இருந்தால் அதை தெரிவிக்க சமூக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

அரசு விடுதிகளில் குறைகள் இருந்தால் புகார் தெரிவிக்க வசதியாக கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில் உதவி மையம் பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள யவனிகா கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த உதவி மையத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு அந்த உதவி மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசு விடுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். சமூக நலத்துறை சார்பில் 2,500 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விடுதிகளில் உணவு, படுக்கை, தலையணை, தங்குமிடம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் மற்றும் குறைகள் இருந்தால் இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் அல்லது ‘வாட்ஸ்அப்’ எண்ணிலும் புகார் தெரிவிக்க முடியும். மேலும் விடுதிகளை சிறப்பாக நடத்த ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

இந்த புகார்களுக்கு முதலில் தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பார். அதன்பிறகு மாவட்ட கலெக்டர், மாநில அளவிலான அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த பிரச்சினை செல்லும். அதிகாரிகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மந்திரியின் கவனத்திற்கு அந்த பிரச்சினை வரும். மொத்தத்தில் விடுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்படும்.

24 மணி நேரமும் இந்த உதவி மையம் செயல்படும். நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய உதவி மையம் கர்நாடகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் பிரச்சினைகள் இருப்பதாக நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. இதுபற்றி சட்டசபை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. உதவி மைய தொலைபேசி எண் 080-22634300, ‘வாட்ஸ்அப்‘ எண் 9901100000 ஆகும். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

இந்த விழா முடிந்த பிறகு கூட்டணி அரசின் மீதான பா.ஜனதாவினர் விமர்சனம் குறித்து பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “கூட்டணி அரசு சுமுகமாக செயலாற்றி வருகிறது. இதை பா.ஜனதா தலைவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் கூட்டணி அரசு பற்றி பா.ஜனதாவினர் தேவை இல்லாமல் குறை கூறுகிறார்கள்“ என்றார்.

Next Story