கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளது வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி


கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளது வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி
x
தினத்தந்தி 8 Aug 2018 2:48 AM IST (Updated: 8 Aug 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளதாக மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

பெங்களூரு,

வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 19-ந் தேதி கர்நாடகத்தில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி முதல் பருவமழை மாநிலம் முழுவதும் பெய்யத்தொடங்கியது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை பகுதிகளில் மழை மிக தீவிரமாக பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.

கர்நாடகத்தில் இன்றைய (அதாவது நேற்று) நிலவரப்படி 97 சதவீத மழை பெய்துள்ளது. 3 சதவீத மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. 13 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளன. இதில் 10 மாவட்டங்கள் வட கர்நாடகத்தின் உள்பகுதியில் உள்ளன. மாநில வளர்ச்சி கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மழை பெய்த பகுதிகளில் நேரில் சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.

எனது தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறைவாக பெய்துள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஏற்கனவே 2 தடவை மந்திரிசபை துணை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். இதனால் பயிர் பாதிப்புகள் உண்டாவது தடுக்கப்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மழை குறைவாக பெய்துள்ள மாவட்டங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் போன்றவை சேகரித்து வைக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.217 கோடி நிதி மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.

Next Story